ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் ஸ்டாலின்
கொடைக்கானலில் காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கோடை காலத்தையொட்டி குடும்பத்தோடு ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் ஐந்து நாட்கள் தங்க இருக்கும் நிலையில் அடுத்தடுத்து அரசின் முக்கிய அதிகாரிகளும் அமைச்சர்களும் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தலைவர்கள் பலரும் மிகவும் கடுமையாக பணியாற்ற வேண்டி இருந்தது. கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் அறிவிப்பு அதற்குப் பிறகு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் என ஒரு மாதம் சூறாவளிப்பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கோடைக் காலம் காரணமாக வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தற்போது கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகள் உட்பட பலரும் முதலமைச்சரை சந்தித்து தேர்தலில் தங்களுக்காக பணியாற்றதற்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது ஐந்து நாள் பயணமாக தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர். இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்ற முதலமைச்சர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் சென்றார். இதையடுத்து அங்கு தனியார் தங்கும் விடுதியில் முதலமைச்சர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை அதாவது மே மூன்றாம் தேதி வரை கொடைக்கானலில் தங்கி இருக்கும் முதலமைச்சர் நான்காம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொள்வதோடு படகு பயணமும் மேற்கொள்ள இருக்கிறார். இதையடுத்து அங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.மேலும் முதலமைச்சர் தங்கி இருக்கும் நாட்களில் கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்து தங்கி ஓய்வெடுத்தார். அதற்கு பிறகு தற்போது மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் கொடைக்கானல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வுக்காக கொடைக்கானல் வந்திருக்கும் நிலையில் அவரை கட்சியினர் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய தலைவர்கள்: அதே நேரத்தில் அரசின் முக்கிய அதிகாரிகளும் அமைச்சர்களும் அடுத்தடுத்து கொடைக்கானல் வர இருப்பதாக கூறப்படுகிறது.
2021 தேர்தலின் போது முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் உள்ளிட்டவற்றை கொடைக்கானலில் தான் தயாரித்ததாக கூறப்படுகிறது. இநிலையில் தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றிருக்கும் நிலையில் பல முக்கிய முடிவுகளை கொடைக்கானலில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுக்க இருப்பதாகவும் இதற்காகவே அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து அவரை சந்திக்க இருக்கின்றனர் என கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu