முதலமைச்சர் ஸ்டாலின் 28ம் தேதி ஸ்பெயின் பயணம்

முதலமைச்சர் ஸ்டாலின் 28ம் தேதி ஸ்பெயின் பயணம்
X

தமிழக முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார்.

இதன் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனித வளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டினை. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள். 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இம்முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்று உள்ளன. குறிப்பாக, மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாது காப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை தவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டன.

இம்மாநாட்டின் முக்கிய முதலீட்டாளர்களான டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் நிறுவனம் (37,538 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), வின்பாஸ்ட் நிறுவனம் (16,000 கோடி ரூபாய்), டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (12,082 கோடி ரூபாய்). ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் (12,000 கோடி ரூபாய்), ஹுண்டாய் நிறுவனம் (6.180 கோடி ரூபாய்), டி.வி.எஸ்.நிறுவனம் (5,000 கோடி ரூபாய்), பெகட்ரான் நிறுவனம் (1,000 கோடி ரூபாய்) மற்றும் செயிண்ட் கோபைன் (3,400 கோடி ரூபாய்) போன்ற குறிப்பிடத்தக்க நிறு வனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அடங்கும்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 6277.27 கோடி ரூபாய் முதலீட்டிலான பர்ஸ்ட் சோலார், குவால்கம் மற்றும் பெங் டே ஆகிய 3 நிறுவனங்களின் திட்டங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்வதுடன் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார் என்றார் .

இதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் 28ம் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!