முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா. சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச் சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவுக்கு பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டும் நோய் குணமாகாமல் இருந்தது.
தொடர்ந்து சிகிச்சை அளித்திட அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிடுமாறு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் 29.8.2022 அன்று சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி டானியவை சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து, முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவின் இன்று இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது, சிறுமி டானியாவிடம் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், தொடர் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அந்த சிறுமியிடமும், அவரது பெற்றோரிடமும் தெரிவித்தார். தனது இல்லத்திற்கு நேரில் வந்து மகளை நலம் விசாரித்து, தேவையான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என்று தெரிவித்ததற்காக முதல்வர் ஸ்டாலினிக்கு சிறுமியின் தாய் சௌபாக்கியம் நன்றி தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத் துறை அமைச்சர் நாசர் ஆகியோரும் உடனிருந்து சிறுமியிடம் நலம் விசாரித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu