மாணவர் தனுஷ் மரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மாணவர் தனுஷ் மரணத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
X

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என கூறினார்

மாணவர் தனுஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி - அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற - நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ - மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது. நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ - மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடையவைக்கிறது.

இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக் கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டுச் சென்று ஆதரவு திரட்டி, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும் கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன். என கூறியுள்ளார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!