பிரதமர் மோடியை வரவேற்க திருச்சிக்கு வர தயாராகிறார் முதல்வர் ஸ்டாலின்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்தை திறந்து வைப்பதற்காக வருகிற ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
இதன் காரணமாக திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் இருந்து பெருமளவில் கட்சியினரை திருச்சிக்கு திரட்டி வந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2வது முனையம் கட்டுவதற்காக இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமத்தால் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை பிரதமர் மோடி தான் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன் கட்டுமானப் பணிகளை 2021ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இப்போது தான் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனை திறந்து வைக்கத் தான் பிரதமர் மோடி ஜனவரி 2அன்று திருச்சி வருகிறார். இதனால் திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலையம் முழுவதும் ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் தி.மு.க.வினரும் இந்த நிகழ்வில் திரளாக கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.
இதனால் தி.மு.க.வினர், பா.ஜ.க.வினர் இடையே எந்த சலசலப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் காவல்துறை மிக உஷாராக இருக்கிறது. பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்தாலும் வரவேற்கவோ, வழியனுப்பவோ தவறாமல் செல்லக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக விலகி விட்டதால் எடப்பாடி பழனிசாமி திருச்சி வரமாட்டார் என்பது மட்டும் உறுதி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu