தேனாம்பேட்டை செனடாப் சாலையில் 2.14 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் ஆய்வு
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டைமண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க, 4 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார், அதன்படி பணிகளும் விரைவாக நடைபெற்றன.
வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில், தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட செனடாப் சாலையில் 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 870 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சி.வி.ராமன் சாலையில் 2 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 610 மீட்டர் நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் என மொத்தம் 4 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, சி.வி. ராமன் சாலை முதல் டி.டி.கே. சாலை வரை நடந்தே சென்று அப்பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வருகின்ற பருவமழை காலத்தில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின் போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு,பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், சட்டமன்றஉறுப்பினர் த.வேலு, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற உறுப்பினர்கள் ஷீபா வாசு, கி.மதிவாணன் மோ.சரஸ்வதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu