இராணுவத்தில் வீரமரணமடைந்த 3 வீரர்களின் வாரிசுக்கு நிவாரண நிதி -முதல்வர் வழங்கினார்

இராணுவத்தில் வீரமரணமடைந்த 3 வீரர்களின் வாரிசுக்கு நிவாரண நிதி -முதல்வர் வழங்கினார்
X

இராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ். குபேர காந்திராஜ் சாதனையை கௌரவித்து முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதியை முதல்வர் வழங்கினார்.

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் நிவாரண நிதியும், கேப்டன் குபேர காந்திராஜ் க்கு பாராட்டுச் சான்றிதழும் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார்.

அவர்கள் இன்று (30.11.2021) தலைமைச் செயலகத்தில், இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று போர் வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்து, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே. ஏகாம்பரம் அவருடைய மனைவி இ. குமாரி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே. கருப்பசாமி அவருடைய மனைவி ஆர். தமயந்தி, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் பி.பழனிகுமார் அவருடைய மனைவி ஜி. பாண்டியம்மாள் ஆகியோருக்கு முதலமைச்சர் கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து தலா 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும், லடாக் - காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை (ஜோஷிமத், உத்ரகாண்ட் மாநிலம் ) பனிச்சறுக்கு மூலம் இந்திய இராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற முதல் தமிழ்நாட்டு இராணுவ வீரரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கேப்டன் எஸ். குபேர காந்திராஜ் சாதனையை கௌரவித்து முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., பொதுத்துறை சிறப்புச் செயலாளர் வி. கலையரசி, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!