தமிழகம் முழுவதும் 58,463 மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 7,56,142 பேருக்கு 2,750 கோடி கடனுதவி

தமிழகம் முழுவதும் 58,463 மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 7,56,142 பேருக்கு 2,750 கோடி கடனுதவி
X

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் கைவினை பொருட்களை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்ட போது. 

திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் கடனுதவிகள், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இன்று (14.12.2021 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் தெரிவித்தாவது:

இன்றைக்கு மட்டும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்துப் பார்த்தால், மகளிர் சுய உதவிக் குழுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் திட்டம் புதிதாக புதுப்பித்து, வங்கிகள் மூலமாக பெற்றிருக்கும் கடனை, அதாவது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்குகிற விழா இந்த விழா.

திருத்தணியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டத்திலும் இந்த நிகழ்ச்சி இன்று நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று திருத்தணியில் நடைபெறுவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் நானும் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு முதலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களுக்கு நான் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இன்று திருத்தணியில் தொடங்குகிற இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 58 ஆயிரத்து, 463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் அளவுக்குக் கடனுதவியும். நலத்திட்ட உதவிகளும் கிடைக்க இருக்கிறது. நீங்கள் இதை நல்லவகையில் பயன்படுத்தி சிறப்பு பெறவேண்டும் என்று நான் உங்களை உளமார வாழ்த்துகிறேன்.

இதில் ஆண்கள் 25 சதவீதமும், பெண்கள் 75 சதவீதமும் இருக்கிறீர்கள். இதை ஏன் நான் சொல்கிறேனென்றால், அதில் ஒரு விஷயம் இருக்கிறது. இவ்வளவு அமைதியாக ஒரு கட்டுப்பாட்டுடன் நீங்கள் அமர்ந்திருக்கக்கூடிய காட்சியைப் பார்க்கும்போது, இனிமேல் மகளிர்தான் பெண்கள் தான் முடிவு செய்ய முடியும் என்ற நிலை உருவாகிறது. சாதாரணமாக பெண்கள் இவ்வளவு அமைதியாக உட்கார்ந்து எங்கும் நான் பார்த்ததில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் இவ்வளவு கட்டுப்பாட்டோடு நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்றால், இதிலேயே நீங்கள், இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பொறுத்தவரைக்கும் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து நீங்கள் பெறப்போகிறீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நான்கு பெண்கள் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடம் கலகலவென இருக்கும். ஆயிரக்கணக்கில் பெண்கள் உட்கார்ந்திருக்கும்போது, இவ்வளவு அமைதியாக, இவ்வளவு கட்டுப்பாட்டோடு உட்கார்ந்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

2006-2011 ஆண்டு காலத்தில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான மகளிருக்கு பல மணி நேரம் நின்று கொண்டே கடனுதவியை வழங்கினேன், சுழல் நிதியை வழங்கினேன். அதன் காரணமாக தமிழ்நாட்டைச் சார்ந்திருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழு உயர்வுக்கு பாடுபட்டோம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் எந்த ஊருக்குப் போனாலும், அதிலும் குறிப்பாக கிராமப் புறங்களில் பிரச்சாரம் செய்தால் - நான் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவள் என்றும், நீங்கள் செய்த உதவியால் தான் என் குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறது என்று நிறைய பெண்கள் இப்போதும் என்னிடத்தில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் புதிய ஆட்சி அமைந்ததவுடன் - மகளிர் சுய உதவிக் குழுவை மறுபடியும் புதுப்பொலிவோடு புதுப்பிக்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். அதை இன்றைக்கு சிறப்பாக நிறைவேற்றித் தருவதற்கு நம்முடைய அமைச்சர் அவர்களும், செயலாளர் பொறுப்பேற்றிருக்கக்கூடிய அமுதா, ஐ.ஏ.எஸ் அவர்களும் மற்றும் அவருக்குத் துணையாக இருக்கக்கூடிய அனைவரும் இன்றைக்கு அந்த கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கியிருந்தாலும், அதைத் தொடர்ந்து சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அது தொடங்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சி அந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. நான் அரசியலாக்க விரும்பவில்லை. இந்த சுய உதவிக் குழுவின் வரலாறை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன்.

1996 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. முதலில் 5177 சுய உதவிக் குழுக்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 7 மாவட்டங்களில் 6014 மகளிர் சுய உதவிக் குழுக்களும் - அதற்கு அடுத்த ஆண்டில் 8 மாவட்டங்களில் 15,029 சுய உதவிக் குழுக்களும் உருவாக்கப்பட்டது. இப்படியே அது வளர்ந்தது.

2006 ஆம் ஆண்டு நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கு என்பது லட்சக்கணக்கு ஆனது. இன்று தமிழ்நாடு முழுவதும் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதில் ஒரு கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் மகளிர் உறுப்பினராக இடம்பெற்றிருக்கிறார்கள்.

இத்தனை லட்சம் குழுக்கள் செயல்படுகிறது என்றால் - ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் இதில் இயங்கி வருகிறார்கள் என்றால் - அதற்கு விதை போட்டவர் தான் நம்முடைய இதயத் தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

மகளிரை ஒருங்கிணைக்கிறோம் - கடன் கொடுக்கிறோம் - அதை அவர்கள் திருப்பிக் கட்டுகிறார்கள் - இது ஏதோ ஒரு வழக்கமான திட்டம் என்று நினைக்கக்கூடாது. எத்தனையோ கடன் கொடுக்கும் திட்டத்தைப் போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்ல முடியாது.

ஒரு பெண், யார் தயவையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு, சொந்தக் காலில் நின்று அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய திட்டம் தான் இந்த மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம்.

* சிக்கனத்தை உருவாக்குவது, அதன் மூலமாக சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது

* குடும்ப எல்லைகளைத் தாண்டி சிந்திக்கும் திறனை உருவாக்குவது

* தானே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது

* அனைவரும் சேர்ந்து கூட்டுறவு மனப்பான்மையுடன் வாழந்திட வேண்டும்,எத்தனையோ நல்ல குணத்தை இக்குழுக்களில் இணைவதன் மூலமாக ஒரு பெண் பெறுகிறார்.

தனிமனிதர்களாக இல்லாமல் ஒரு குழுவாக வாழும் போது ஒரு பெண் தன்னம்பிக்கை பெறுகிறார். அத்தகைய தன்னம்பிக்கையை இந்தத் திட்டம் உருவாக்குகிறது.

இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி. இந்த சுழல் நிதி பெண்கள், பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் மட்டும் 17,479 சுய உதவிக் குழுக்களுக்கு 87.39 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. * மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் கண்டறியப்பட்டு 5838 சங்கங்கள் மூலமாக

14.59 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. * மகளிர் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வட்டார அளவிலான கூட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். * இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யும் முறை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் - 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை 36 லட்சத்து, 97 ஆயிரத்து 59 குழுக்களுக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதுவரை 6777 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த தொகை 10 ஆயிரம் கோடி ஆகிவிடும். அடுத்த ஆண்டுக்குள் அடுத்த 10 ஆயிரம் கோடி இலக்கை எட்டிட நான் உத்தரவிட்டுள்ளேன். சிறப்பு முகாம்கள் அமைத்து கடன் வழங்குவதை துரிதப்படுத்தவும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் வழங்க குறுந்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கவும், அக்கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. இந்த வகையில் 10 இலட்சம் முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சான்று விதை உற்பத்தி மையம் செயல்படுகிறது. இது இயற்கை பண்ணையம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயம், கைவினைப் பொருட்கள் செய்தல், உணவு பதப்படுத்தும் தொழில் செய்தல் ஆகியவை ஊக்கப்படுத்தப்படுகிறது.

இவை அனைத்துக்கும் மேலாக தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் அனைத்துப் பொருட்களையும் சந்தைப்படுத்த வழிகாட்டி வருகிறோம். தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

வறுமை ஒழிப்பு என்பதையும் தாண்டி, ஊரகத் தொழில் மேம்பாட்டுத் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம். இப்படி ஏராளமான திட்டங்களை நம்முடைய தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக மட்டுமே சொன்னேன். இவை அனைத்தையும் விரிவாகச் சொன்னால் பல மணி நேரம் ஆகும். ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், மகளிர் அனைவரையும் மேம்படுத்தும் மகத்தான திட்டங்களைத் தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தேர்தலை சந்திப்பதற்கு முன்பு நான் சொன்ன உறுதிமொழிகளை முழுமையாக நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று நான் சொல்லவில்லை, படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவேற்ற முடியாமல் நாங்கள் விட்டுவிட மாட்டோம். அனைத்தையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றியே தீருவோம் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று முதலமைச்சர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இந்த விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பொருட்களின் கண்காட்சியினைப் பார்வையிட்டார். உடன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் ச.சந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!