குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி உயிரிழந்தார்: முதல்வர் இரங்கல்
தமிழக முதல்வர் ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை சரகத்தில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில். கடந்த 30-12-2021 அன்று துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது. இப்பயிற்சியின் போது. நார்த்தாமலைக்கு அருகில் உள்ள கொத்தமங்கலப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அச்சிறுவனின் தலையின் இடதுபக்கத்தில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. குண்டு பாய்ந்த அச்சிறுவன் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு. மருத்துவர்களால் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (3-1-2022) மாலை அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இத்துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனையுற்று. உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில், இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu