கன்னியாகுமரி-புதுக்கோட்டை திருக்கோயில்களின் பராமரிப்புத் தொகையை உயர்த்தினார் முதல்வர்

கன்னியாகுமரி-புதுக்கோட்டை  திருக்கோயில்களின் பராமரிப்புத் தொகையை உயர்த்தினார் முதல்வர்
X
குமரி மாவட்டக் கோயில் பராமரிப்பு தொகையை 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை கோயில் பராமரிப்புத் தொகை 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்படும் அரசு மானியத்தை ரூ.3 கோடியிலிருந்து ரூ.6 கோடியாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு தற்போது வழங்கப்படும் அரசு மானியத்தை ரூ.1 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்கோயில்அலுவலர்களிடம் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக தற்போது வழங்கப்பட்டு வரும் ஆண்டுக்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி அதற்கான காசோலையை சுசீந்திரம் - கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்கள் இணை ஆணையர்/செயல் அலுவலர் இரா.ஞானசேகரிடம் வழங்கினார்.


மேலும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி அதற்கான காசோலையை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இணை ஆணையர் க.தென்னரசு மற்றும் செயல் அலுவலர் கோ.சரவணன் ஆகியோரிடம் வழங்கினார்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியம் 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்

புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக அரசு மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகள் தமிழ்நாடு மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. அப்பொழுது கன்னியாகுமரி தேவசம் போர்டு என்ற அமைப்பின் கீழ் 490 திருக்கோயில்களின் நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. இத்திருக்கோயில்களுக்காக தற்போது ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு மானியமான 3 கோடி ரூபாய் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை.

எனவே, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தினை 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாக உயர்த்தி 22.10.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் 225 திருக்கோயில்கள் உள்ளன. இந்நிர்வாகத்தின் கீழ் உள்ள திருக்கோயில்களின் பராமரிப்பு செலவுகளுக்கு, புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகத்தால், 35 கிராமங்களில் 35,500 ஏக்கர் நன்செய் நிலங்களும், பூஜை பத்து மானியம், உள்துறை சேவை மானியம் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் என வகைப்படுத்தப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வரப்பெற்ற நிலையில், மேற்படி நிலங்கள் மூலம் சரியான வருமானம் வராத காரணத்தினால், அரசிடம் நிலங்களை ஒப்படைத்து அதற்கு பதிலாக பூஜை செலவுகளுக்காக 1897 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 1.18 இலட்சம் ரூபாய் பராமரிப்பு செலவிற்கு வழங்கப்பட்டது.

இத்தொகை 30.11.2011 முதல் 1 கோடி ரூபாயாக உயர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு அரசு மானியத்தினை 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி 12.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

மேற்கண்ட அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக வழங்கப்படும் அரசு மானியத்தை 6 கோடி ரூபாயாக உயர்த்தியும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக வழங்கப்படும் அரசு மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்தியும், அதற்கான காசோலைகளை முதலமைச்சர் திருக்கோயில் அலுவலர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்