முதலமைச்சரின் "கிறிஸ்துமஸ்" வாழ்த்து: தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுகோள்
முதல்வர் ஸ்டாலின்
"தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் - தமிழ் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றிய கிறிஸ்துவ மக்களின் நலனையும் - உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகழகமும் - கழக அரசும் என்றென்றும் துணை நிற்கும்" - என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ்" வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது :
"உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு" என ஈகையையும்; "ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு" என சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையையும்; எதிரிகளையும் நேசியுங்கள், பகைவருக்கும் நன்மை செய்யுங்கள்" என எக்காலத்தும் போற்றத்தக்க உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசு பிரான் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள கிறித்துவ மக்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்பும் அமைதியும் அனைவரது வாழ்விலும் தவழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இவ்விழா கொண்டாடப்படுவதுடன், அன்பினை பரிமாறிக்கொள்ள ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களையும்; ஏழை எளியோருக்கு உதவிகளையும் வழங்கி மகிழ்கின்றனர். அனைவரும் சமம் என்ற சமத்துவக் கொள்கை இந்நாளில் மிளிர்வதைக் காண்கிறோம்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும் தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றிய கிறித்துவ மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழகமும் கழக அரசும் என்றைக்கும் தோளோடு தோள் சேர்ந்து துணை நின்றிருக்கிறது. அதேவழியில் தொடர்ந்து பயணித்துச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நமது அரசு பாதுகாக்கும்.
மகிழ்ச்சி பொங்கக் கொண்டாடப்படும் இந்த விழாவை கொரோனா காலக் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு - தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து - பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டு, என் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu