இடைத்தேர்தல் வாக்குப்பதிவை காணொலி வாயிலாக கண்காணித்த தலைமை தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு (பைல் படம்).
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 238 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆயிரத்து 430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளும் 310 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் மட்டும் 1206 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு வாக்குப்பதிவு நிலவரத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேரலை மூலமாக கண்காணித்தார். அப்போது வாக்குப்பதிவு சீரான முறையில் நடைபெறுகிறதா? முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தலைமைச் செயலகத்தில் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மை விவகாரம் தொடர்பாக எழுந்த புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இந்தியா முழுவதுக்கும் ஒரே இடத்தில் இருந்து மை விநியோகம் செய்யப்படுகிறது. அதில் எந்தவித குறைபாடும் இல்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு என எவ்வித புகாரும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு ரூ.4000 அளித்துள்ளதாக பெறப்பட்ட புகார் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu