மிக்ஜம் புயல் நிவாரணம் ரூ.6 ஆயிரம்: யாருக்குக் கிடைக்கும்?
சென்னை வெள்ளம் - கோப்புப்படம்
மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த நான்கு மாவட்டங்களிலும் அனைத்துக் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படாது என்றும், அதற்கென சில வழிமுறைகள் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தெந்த வழிமுறைகளைப் பின்பற்றி நிவாரண நிதி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
மிக்ஜம் புயலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தத் தொகையை நியாயவிலைக் கடைகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 16 மண்டலங்களின் அநேக பகுதிகள் பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால் சென்னை மாநகரில் உள்ள குடும்பங்களுக்கு முழுமையாகவும், மற்ற மூன்று மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட தாலுகாவுக்கு உள்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் நிவாரண நிதி வழங்குவதாவும் பரிசீலிக்கப்படுவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒட்டுமொத்த பகுதிகளும் புயலால் பாதிக்கப்படவில்லை. எனவே, அது தொடர்பாக ஆய்வு செய்து நிவாரணத் தொகை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ரேஷன் அட்டை இல்லாத பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், எரிவாயு சிலிண்டர் ரசீது, வாடகை ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து நிவாரணத் தொகை வழங்கவும் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முழுமையாக நிவாரண நிதி கிடைக்கவும், பாதிக்காதவர்களுக்கு நிவாரண நிதி கிடைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதில் இந்த விவகாரத்தை அரசு கவனத்துடன் கையாள வேண்டும் என்றும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே, மிக்ஜம் புயல் பாதித்த பகுதியில் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் டிச.16ம் தேதி வழங்கப்பட உள்ளதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
மிக்ஜம் புயல் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் தொகை நியாயவிலைக் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் டிச.16-ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
வாழ்வாதாரம் இழந்தோருக்கு மட்டுமே நிவாரணத் தொகை கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இதன் மூலம் சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு பயன்பெறும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu