கொரோனா நடவடிக்கைகளை கண்காணிக்க வார்டு வாரியாக கண்காணிப்பு குழு

கொரோனா நடவடிக்கைகளை கண்காணிக்க வார்டு வாரியாக கண்காணிப்பு குழு
X

சென்னை புரைசவாக்கத்தில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் ஆகியோர் பொதுமக்கள் இடையே கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க வார்டு வாரியாக கண்காணிப்பு குழு நியமிக்கப்பட உள்ளதாக போலீஸ் மற்றும் மாநகராட்சி கமிஷனர்கள் தெரிவித்தனர்.

சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அங்காடிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் நேற்று பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மற்றும் முககவசம் அணியாத நபர்களை கண்காணிக்க வார்டு வாரியாக குழு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை முடியும் வரை தொடர்ந்து, அமலாக்க குழுக்கள் மூலம் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்படும்.

தியாகராயநகர் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். இதுபோன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் குற்றச்சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். குற்ற சம்பவங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 15 மண்டலங்களுக்கும் அமலாக்க குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகை வருவதால் இந்த குழுக்கள் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை குழுக்கள் அமைத்தாலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்றால், அது பயன் தராது.

சென்னையில் பல இடங்களில் கல்வி அறிவு உடையவர்கள் கூட முககவசம் அணியாமல் தான் வெளியே சுற்றுகின்றனர். அதனை கட்டாயம் அவர்கள் தவிர்க்க வேண்டும். கடந்த மே மாதம் 6-ந்தேதி முதல் தற்போது வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத 97 ஆயிரம் தனிநபர்கள் மற்றும் 9 ஆயிரத்து 839 வணிக நிறுவனங்களுக்கு ரூ.4 கோடியே 93 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், 926 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணியவில்லை என்றால், அவர்களுக்கு எந்த பொருளும் விற்பனை செய்யக்கூடாது. அதேபோல் கடை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 55 லட்சத்து 58 ஆயிரம் பேர் உள்ளனர். அதில் 85.46 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 15 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தவில்லை. 23 லட்சத்து 86 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் வாரந்தோறும் நடக்கும் மெகா தடுப்பூசி முகாமுக்காக காத்திருக்க வேண்டாம். தினமும் அனைத்து பகுதிகளிலும், தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அங்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!