இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும்: குடியரசு துணைத் தலைவர்

இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும்: குடியரசு துணைத் தலைவர்
X
ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் பவளவிழாக் கொண்டாட்டங்களில் உரையாற்றினார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு.

சென்னையில் இன்று மாலை இந்துஸ்தான் வர்த்தக சபையின் பிளாட்டினம் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு ஆற்றிய உரையில் பேசியதாவது:

இன்று மாலை உங்களிடையே இருப்பதிலும், என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், முதலில், ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பின் பவள விழா ஆண்டில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவொரு நிறுவனத்தின் பயணத்திலும் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். தலைவர், சத்யநாராயணன் ஆர்.தவே, அலுவலகப் பொறுப்பாளர்கள், குழுவின்மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள்.

1945 ஆம் ஆண்டில் திரு சி.எம். கோத்தாரி மற்றும் ராய் பகதூர் ஹிம்சந்த் கே ஷா ஆகியோரால் நிறுவப்பட்ட சேம்பர், இப்போது சுமார் 1000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பரந்த அமைப்பாக வளர்ந்துள்ளது, நீங்கள் அனைவரும் இது பெருமைப்படக்கூடிய விஷயமாகும். குறிப்பிடத்தக்க வகையில், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நடவடிக்கைகளின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் விதமாக, வணிகம் மற்றும் வர்த்தகத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து உறுப்பினர்கள் எடுக்கப்படுகிறார்கள். இந்தியத் தொழில் வர்த்தக சம்மேளனத்தின் (எஃப் ஐ சி சி ஐ) (FICCI) கூட்டமைப்பு, உங்கள் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

நீங்கள் அனைவரும் அறிந்தபடி, விடுதலைக் காலத்தின் போது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை பெரும்பாலும் சோசலிசக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சியை நோக்கி இந்தியா வெற்றிகரமாக முன்னேறியதுடன், நாடு தாராளமயமாக்கலை ஏற்றுக்கொண்டது. பொதுத்துறையுடன் சேர்ந்து, தனியார் துறையும் நமது பொருளாதாரத்தில் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிப்பது மட்டுமல்லாமல், அதை அதிக உயரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சேம்பர், பல ஆண்டுகளாக, மாற்றங்கள் கொண்ட நிறுவனமாக உருமாறி, நம் நாட்டின் பொருளாதார, செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.


கோவிட் -19 பெருந்தொற்று நோயையடுத்து நாம் சவாலான காலங்களைச் சந்தித்து வருகிறோம், இது உலகம் முழுவதும் முன்னெப்போதுமில்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தி, வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பாதித்துள்ளது. பெருந்தொற்றுநோய் உலக அளவில் கூர்மையான பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் -19 பொருத்த வரை இன்னும் சில காலங்களுக்கு நிச்சயமற்ற தன்மை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இரண்டு அம்சங்களுக்கு - குழந்தைகள் உட்பட அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் அனைவரும் கண்டிப்பாக கோவிட் -19 நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றுக்கு - உயர் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எப்போதும் முகக்கவசம் அணிதல், பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்தல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், கூட்டங்களைத் தவிர்ப்பது உட்பட தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல் ஆகியவை மிகவும் முக்கியம்.

பொருளாதாரம் மீண்டெழவும், மக்களின் வாழ்வாதாரம் - குறிப்பாக ஒழுங்கமைக்கப்படாத துறையினர், தினக்கூலிகள், சிறு விற்பனையாளர்கள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியம்.

இரண்டாவது அலை மறுமலர்ச்சியைக் மந்தப்படுத்தியிருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் திரும்ப வந்துள்ளது. மீட்புக்கும் நீண்டகால புதுப்பிப்புக்குமான பாதையில் உறுதியாக உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கொள்கை சீர்திருத்தங்களுக்கு நன்றி.

பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 24.4% என்று சுருங்கியதற்கு மாறாக, 2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 20.1% என்ற சாதனைவேகத்தில் வளர்ந்தது. பல்வேறு அறிக்கைகள் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் வலுவான முன்னேற்றத்தைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் சேவைத் துறை சற்று மந்தமாக இருந்தது. பெருந்தொற்றுநோயின் இருண்ட காலங்களிலும் வேளாண் துறை தொடர்ந்து செயலாற்றி வந்தது. கடின உழைப்பாளிகளான நமது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் நன்றி. முதல் காலாண்டில் 4.5 % வளர்ச்சியை அடைந்ததன் மூலம், (கடந்த ஆண்டு இதே காலத்தில் 3.5 % ஆக இருந்தது), வேளாண் துறை எந்தச் சூழலிலும் செயலாற்றக் கூடிய நெகிழ்தன்மை கொண்டது என்பதைக் காட்டியது. உரங்கள், சிமெண்ட், எஃகு, நிலக்கரி மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் போன்ற முக்கிய துறைகளும் நேர்மறையான வளர்ச்சியைக் காண்பித்துள்ளன.

நாம் இப்போது பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறோம், அனைத்து குறியீடுகளும் வரவிருக்கும் மாதங்களில் நீண்ட கால வளர்ச்சி மற்றும் மீட்சியைச் சுட்டிக்காட்டுகின்றன. வெவ்வேறு குறியீடுகளின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி 2021-22 ஆம் ஆண்டிற்கான 9.5 சதவிகித வளர்ச்சியை மாற்றமின்றி அப்படியே வைத்துக் கொண்டுள்ளது. மாநிலங்களால் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரத்தைக் கட்டங்கட்டமாக மீண்டும் திறப்பதன் மூலம், நுகர்வோர் நம்பிக்கை திரும்பியுள்ளது, சந்தை உணர்வும் நேர்மறையான போக்கைக் காட்டியுள்ளது.

கடந்த 17 மாதங்களில் கற்றுக்கொண்ட பாடங்களால், இப்போது பெருந்தொற்றுநோயை மேலும் திறம்பட சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோம். சிறு வணிகங்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைவரும் தங்கள் நடவடிக்கைகள் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர் என நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அனைவரும் அந்தத் திசையில் செயல்பட வேண்டும். வலுவான மேக்ரோ-பொருளாதார அடிப்படைகள், முன்னோக்கி பார்க்கும் சீர்திருத்தங்கள், ஜி எஸ் டி, அந்நிய நேரடி முதலீட்டைத் திறத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவை காரணமாக இந்திய பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்ஆற்றல் கொண்டதாக உள்ளது.

பொருளாதாரத்தின் நீண்டகால மறுமலர்ச்சிக்கு மத்திய அரசும் மாநிலங்களும் இந்திய அணியாக செயல்பட்டு அனைத்து துறைகளிலும் இந்தியாவை மேலும் சிறந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசும் பல்வேறு மாநிலங்களும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 2021 ஆம் நிதியாண்டில், மொத்த அந்நிய நேரடி முதலீடு 81.72 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது ஆண்டுக்கு 10% அதிகமாகும்.சிஐஐ மற்றும் எர்ன்ஸ்ட் & யங் அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா, ஆண்டுக்கு 120-160 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நேரடி அந்நிய முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல, உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொதுத்துறை -தனியார்துறை-கூட்டை ஊக்குவிப்பது, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு இன்றியமையாதது.

மற்ற பல நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் படித்த, திறமையான இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர்; அறிவியல் மனிதவளமும் அதிகம் உள்ளது. தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆராய்ச்சி, வளர்ச்சிப்பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதன் மூலம் புதுமையின் வளர்ச்சிக்கு ஏற்ற சரியான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சூழலில், பொதுத்துறையும், தனியார் நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதுபோன்ற கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதை எளிதாக்குவதில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (எச்.சி.சி) போன்ற அமைப்புகள் முனைப்பான பங்கு வகிக்க வேண்டும்.

நிலையான,முதலீட்டாளருக்கு சாதகமான அரசாங்கம்; நல்ல இணைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள்; திறமையான, திறன் வாய்ந்த கடின உழைப்பாளிகள் ஆகியவற்றுடன், முதலீடு செய்வதற்கு கவர்ச்சிகரமான இடமாக, தமிழ்நாடு திகழ்கிறது.

என்ஐஆர்எஃப் தரவரிசை 2021 இல் மூன்றாவது முறையாக சிறந்த தரவரிசை கொண்ட இந்திய கல்வி நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வியமைப்புக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ்நாடு மிகப் பண்டைய காலத்திலிருந்து சிறந்து விளங்கும் ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. சில அகழ்வாராய்ச்சிப் பொருட்களின் கார்பன் டேட்டிங் காலத்தை அறியும் ஆய்வு, தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என்பதை வெளிப்படுத்தி அதன் தொன்மையின் மீது புத்தொளி பாய்ச்சியுள்ளது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவிலில் தமிழ் இந்திய கலாச்சாரத்தின் தாக்கத்தை நாம் காணலாம்

இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்ற முதல்வர் எம் கே ஸ்டாலினின் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். உண்மையில், இது காலனித்துவ கண் கொண்டல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்துடன் மாற்றி எழுதப்பட வேண்டும்

கல்லூரி மாணவர்களுக்காக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை சேம்பர் நடத்தி வருவதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இளைஞர்களிடையே திறன் மேம்பாட்டை பெரிதும் வளர்க்குமாறு நான் சேம்பரைக்கேட்டுக்கொள்கிறேன். உங்களைப் போன்ற அமைப்புகள், உங்கள் முன்னணி நடவடிக்கைகளில் ஒன்றாக இளைஞர்களின் பயிற்சியையும், திறன் மேம்படுத்துதலையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல் சுயதொழில் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வேலை தேடுவோர் என்பதை விட வேலையை உருவாக்குபவர்களாக மாறுவதற்கு அவர்களுக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் வழங்க வேண்டும்.

ஆலோசனை மற்றும் ஆலோசனை செயல்முறைகள் மூலம் அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து, இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு உகந்த ஒரு சூழலை உருவாக்கவும் , பராமரிக்கவும் சேம்பர் செயல்பட்டு வருகிறது என்பதையறிந்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கொள்கை தொடர்பான விஷயங்கள், செயல்திறன் மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துதல்; பல்வேறு சிறப்பு சேவைகள் மற்றும் உலகளாவிய இணைப்புகள் மூலம் தொழில்துறைக்கான வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் அது அரசாங்கத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

முதலீட்டாளர் நம்பிக்கைக்கு அவசியமான வணிகத்தின் நேர்மறையான பிம்பத்தை முன்னிறுத்துவதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களைப் போன்ற, தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள், ஒட்டுமொத்த கார்ப்பரேட் மற்றும் வணிக சமூகத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டு வரும் கருப்பு ஆடுகளை அடையாளம் கண்டு களையெடுக்க வேண்டும் என நான் எப்போதும் அறிவுறுத்தி வருகிறேன்.

ஹிந்துஸ்தான் சேம்பர், வணிகத்தில் சிறந்து விளங்குவதற்காகவும், சமூகத்திற்காற்றும் பங்களிப்பிற்காகவும் சிறந்த ஆளுமைகளை "சாம்பியன் ஆஃப் ஹியூமானிடி" விருது வழங்கி கௌரவிக்கிறது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எனவே, அப்பல்லோ குழுமத்தின் நிறுவனர் தலைவர் பிரதாப் சி.ரெட்டி அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது மிகவும் பொருத்தமே. அவருடைய பணி தொலைநோக்குப்பார்வையுடன் கூடிய சாதனைசேவையாகும்.

கடந்த 75 ஆண்டுகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் சேம்பரின் பங்களிப்பு பற்றிய விவரங்கள் அடங்கிய பவள விழா கொண்டாட்டங்கள் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட விழாமலரை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத் தலைவர் வெங்கையாநாயுடு பேசினார்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!