உணவில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பணம் திருட்டு: பணிப் பெண் கைவரிசை

திருட்டு நடந்த வீடு
வீட்டில் இருந்தவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, 2.5 லட்சம் ரூபாயை திருடி சென்ற பணிப் பெண்ணை போலீசார் கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.
சென்னை, வேளச்சேரி, காந்தி ரோட்டை சேர்ந்தவர் சந்தோஷ்(26), ஐ.டி நிறுவன ஊழியர். இவர் தனது தந்தை மனோகரன், (61), பாட்டி பேபி அம்மாள்(75), ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர்களுக்கு சமைப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த சுப்பம்மாள்(45), என்பவரை பணியமர்த்தியிருந்தனர். நேற்று வழக்கம் போல சந்தோஷ் வேலைக்கு சென்று விட்டார்.
இரவு பணி முடித்து வீடு திரும்பியபோது, வீட்டின் வெளிப்புறம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த சந்தோஷ் கதவை திறந்து பார்த்தபோது, ஹாலில் மனோகரனும், படுக்கை அறையில் பேபி அம்மாளும் மயங்கி கிடந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதித்தார்.
பின், வீட்டை சோதனையிட்டதில் பீரோ லாக்கர் திறந்து கிடந்தது. அதிலிருந்த, 2.5 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. வீட்டில், மூன்று காலி மதுபாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் காணப்பட்டது.
இது குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி, வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதில், சுப்பம்மாள் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, பணத்தை திருடியதும். தன்மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க சிகரெட் துண்டுகள், மது பாட்டில்களை வீட்டில் வைத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து, 2.5 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர். பின், சுப்பம்மாள் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய பிணையில் அனுப்பி வைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu