திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் திடீர் திருப்பம்: ஊழியர் நாடகமாடியது அம்பலம்
திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளையில் ஈடுப்பட்ட ரயில்வே ஊழியர் டீக்கா ராம் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை டிக்கட் கவுண்டரை திறந்தபோது அங்கு டிக்கட் புக்கிங் அலுவலரான டீக்கா ராம்(23), என்பவர் கட்டிப் போடப்பட்ட நிலையில் அங்கு இருந்த ஒரு லட்சத்தி முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.
பின்னர் இச்சம்பவம் குறித்து டீக்கா ராமிடம் விசாரித்த பொழுது தன்னை 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் தாக்கிவிட்டு அதே அறையில் கட்டி வைத்து விட்டு அங்கிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக ரயில்வே போலீசாரிடம் கூறினார்.
பின்பு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால் போலீசார் டீக்காராம் இன் பக்கம் தனது விசாரணையை திருப்பினர். அப்போது பெரும் திருப்பமாக இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது டீக்காராம் நடத்தியது அம்பலமானது.
இந்த சம்பவம் நாளன்று இரவு ஒரு மணிக்கு டீக்காராம் ஊரப்பாக்கத்தில் இருக்கும் தனது மனைவி சரஸ்வதிக்கு போன் செய்து இரண்டு முப்பது மணிக்கு ஊரப்பாக்கத்தில் இருந்து ஆட்டோவின் மூலம் வர வைத்துள்ளார். பின்னர் 4 மணி அளவில் தன் மனைவியை விட்டு தன் கைகளை கட்டிவிட்டு கவுண்டரில் இருந்த வசூல் பணம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை மனைவியிடம் கொடுத்து அதே ஆட்டோவில் ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இந்த நாடக சம்பத்தை அரங்கேற்றியது அம்பலமானது.
மேலும் டீக்கா ராம் ஆன்லைன் ரம்மி விளையாடி தனது கிரெடிட் கார்டில் 70 ஆயிரம் ரூபாய் மற்றும் மற்றொரு வங்கி கிரெடிட் கார்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இந்த கடனை அடைப்பதற்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே போலீசார் கூறியுள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu