மசாஜ் சென்டரில் பட்ட பகலில் மர்ம கும்பல் கைவரிசை : 2 பேருக்கு வெட்டு

X
சிசிடிவி கேமிராவில் பதிவான மர்ம கும்பலின் கைவரிசை.
By - S.Kumar, Reporter |27 Oct 2021 7:45 AM IST
வேளச்சேரியில் மசாஜ் சென்டரில் பட்ட பகலில் புகுந்த மர்ம கும்பல் இரண்டு பேரை அரிவாளால் வெட்டி, நகை,பணம், செல் போன்களை கொள்ளையடித்து சென்றது.
மசாஜ் சென்டரில் புகுந்த கும்பல் பட்டாக் கத்தியால் தாக்கி 5 சவரன் தங்க நகை, 30000 ரூபாய் பணம், 7 செல்போன்களை பறித்து சென்ற சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் கிரியேட்டிவ் சலூன் அண்ட் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடைபெற்று வருகிறது.
இந்த மஜாஜ் சென்டரில், இன்று (26-10-2021) மதியம் சுமார் 12.50 மணியளவில் வெள்ளை உடை அணிந்த நபருடன் 5 பேர் கொண்ட கும்பல் பட்டாக் கத்தியுடன் வந்துள்ளனர். வந்த உடனேயே பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு ஸ்பா ஊழியரான அன்புரோஸ் பெர்னாண்டஸ் என்பவர் தரமறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கும்பல் தலையில் பட்டாக் கத்தியால் தாக்கிவிட்டு, அங்கிருந்த பெண்களின் கைப்பையில் இருந்த 30000 ரூபாய் பணம், 7 செல்போன்கள், மற்றும் 5 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஒரு பெண்ணின் நெற்றியில் தாக்கி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் இருவரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
செல்வதற்கு முன்பாக போலீசில் புகார் செய்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து வேளச்சேரி ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் மசாஜ் சென்டர் உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த பிரச்சனையை கூறியுள்ளார்.
ஆய்வாளரும் ரோந்து வாகனத்தை அனுப்பி என்னவென்று பார்க்க சொல்லி உத்தரவிட்டுள்ளார். ரோந்து வாகனமும் சென்று பார்த்து விட்டு சமபவத்தில் ஈடுபட்ட ஒருவரை மட்டும் பிடித்து வந்தனர். ஆய்வாளர் அவரை எங்காவது இறக்கிவிட்டு விடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு ரோந்து வாகன போலீசாரோ ஆய்வாளரே செல்கிறார் நமக்கு எதற்கு வம்பு என அவரை அனுப்பி வைத்து விட்டனர்.
மசாஜ் சென்டர் உரிமையாளர், ஆய்வாளர் பிடித்த நபரை விட்டு விட்டதால், அவரது வழக்கறிஞர் மூலமாக மாலை 6 மணிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் விஷயம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், உளவுத்துறை போலீசாருக்கும் தெரியவர ஆடிப்போன் ஆய்வாளர் சண்முகசுந்தரம், உடனடியாக வழக்கறிஞரிடம் பேசி சிசிடிவி காட்சிகளை வாங்கி மர்ம கும்பலை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவர்களும் தேடி ஒரு நபரை மட்டும் பிடித்து அவர் மூலம் மற்றவர்களை தேடி வருகின்றனர். அதே போல் இந்த மாதம் 17ம் தேதியும் ஒரு கும்பல் இதே மஜாஜ் சென்டருக்கு வந்து சென்ற போதும் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போதும் கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மதியம் 1.30 மணியளவிலேயே நடந்த சம்பவத்தை அறிந்தும் ஆய்வாளர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணம் என்ன, பிடிபட்ட நபரை விட்டு விட சொன்னது ஏன்? என்ற கேள்விகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் தான் விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்.
மேலும் வேளச்சேரியில் ஆய்வாளருக்கு தெரிந்தே பல இடங்களில் சட்டவிரோத மசாஜ் சென்டர்கள் நடந்து வருவதாகவும், அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu