சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனையில் 2 பெண்களுக்கு கர்ப்பபை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து சாதனை…

சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனையில் 2 பெண்களுக்கு கர்ப்பபை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து சாதனை…
X

கர்ப்பபை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனையில் 2 பெண்களுக்கு கர்ப்பபை மாற்று அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகே ஆசியாவின் முன்னணி பலவகை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையமாக கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (ஜிஜிஎச்சி) மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது, செக் குடியரசு நாட்டின் மருத்துவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இரண்டு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைபடைத்துள்ளனர்.

இதுகுறித்து, கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மகப்பேறியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் பத்மப்ரியா விவேக் கூறியதாவது:

எங்கள் மருத்துவமனையில் சவாலான வகையில் இரண்டு பெண்களுக்கு கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் மேற்கொண்டோம். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு 16 மணி நேரம் சிகிச்சை நடைபெற்றது. முன்னதாக கர்ப்பபை தானமாக வழங்கிய அவரது தாயின் ரத்த வகை பொருந்தவில்லை என்பதால், பிளாஸ்மா பரிமாற்றம் செய்யப்பட்டது.

மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னதாக 3 நாள்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அதேபோல ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு 15 மணி நேரம் திறந்தநிலை கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் கர்ப்பப்பை தானம் அளிக்கும் அவரது தாயிடம் இருந்து கர்ப்பபையை மீட்க 8 மணி நேரமானது என அவர் தெரிவித்தார்.

செக் குடியரசு நாட்டின் மருத்துவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் கூறியதாவது:

கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை என்பது கருவுறாத பெண்களுக்கு நம்பிக்கையை விதைக்கிறது. பிறவியில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யக் கூடியது. கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை மூலம் இளம்பெண்கள் தங்களின் தாய்மைப் பேறு அடைய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இந்தியாவைப் பொருத்தவரை கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சை நடைமுறை ஆரம்ப நிலையில் தான் உள்ளது.

மேலும் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவக் குழுவினர் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடைமுறையை நிச்சயம் நெறிமுறைப் படுத்துவார்கள் என மருத்துவர் ஜிரி ப்ரோனெக் தெரிவித்தார்.

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சை நடைமுறையை செக் குடியரசு நாட்டின் டாக்டர் ஜிரி ஃப்ரோனெக் தலைமையில் மகப்பேறியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் பத்மப்ரியா விவேக், கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் ஜாய் வர்கீஸ், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இயக்குநர் டாக்டர் மேட்டு சீனிவாஸ் ரெட்டி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம் மற்றும் எச்.பி.பி. அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் ரஜனிகாந்த் பாட்சா, எச்.பி.பி. மயக்க மருந்தியல் துறை பிரிவு தலைவர் டாக்டர் செல்வகுமார் மல்லேஸ்வரன், சிறுநீரகவியல் முதுநிலை ஆலோசகர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை டாக்டர் பி.முத்துகுமார், ரத்தகசிவு தடுப்பு முதுநிலை ஆலோசகர் டாக்டர் பொன்னி சிவபிரகாசம் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் செய்தனர்.

இந்த சாதனை குறித்து கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அலோக் குல்லர் கூறியதாவது:

நாட்டில் உள்ள 5 ஆயிரம் பெண்களில், ஒரு பெண் கர்ப்பப்பை சார்ந்த குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத மலட்டுத் தன்மையால் பாதிக்கப்படுகிறார். கிளனிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி கர்ப்பபை மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறது.

தாய்மைப் பேறு நம்பிக்கையை இழந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த சிகிச்சை முறை புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று அலோக் குல்லர் தெரிவித்தார்.

Tags

Next Story
கேன்சர்க்கு இனி குட் பை.. புதிய தடுப்பூசி உருவாக்கி உலகையே அதிர வைத்த ரஷ்யா !