சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் முழ்கின. குறிப்பாக பேசின்பிரிட்ஜ் - வியாசா்பாடி இடையே உள்ள பாலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கான முக்கிய பாலமாகும். இதில் அபாய அளவை தாண்டி தண்ணீா் தேங்கியதால் சென்னை வரும் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.
வெளியூா்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில்கள் ஆவடி, திருவள்ளூா் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. பின் மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக ஆவடி, திருவள்ளூா் உள்ளிட்ட புறநகா் பகுதியில் இருந்து இயக்கப்பட்டன.
திங்கள்கிழமை காலை முதல் மின்சார ரயில் சேவைகள் முடங்கிய நிலையில் தண்டவாளங்களில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டவுடன் நேற்று பிற்பகல் முதல் குறைந்த அளவிலான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்து மறுஅறிவிப்பு வரும் வரை சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.
திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், வெளியூர் செல்லும் பல்வேறு ரயில்களும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 24 மணிநேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu