சென்னை உள்நாட்டு விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல் 2 பேர் கைது

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ 80 லட்சம் மதிப்புள்ள 1.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பல சர்வதேச விமானங்கள், இந்தியாவின் டெல்லி, திருவனந்தபுரம், லக்னோ போன்ற இடங்கள் வரை வெளிநாட்டு விமானங்களாகவும், பின்னர் மும்பை, சென்னை போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு உள்நாட்டு விமானங்களாகவும் இயங்குகிறது.

வெளிநாட்டு விமானமுனையத்தில் கெடுபிடி அதிகம் இருக்கும் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவது சிரமம். ஆகையால் கடத்தல் கும்பல்கள், நூதன முறையை பின்பற்றுகிறார்கள்.

அதவாது வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானத்தில் தங்கத்தை எடுத்துவருகின்றனர். அவர்கள் இறங்கக்கூடிய விமானநிலையத்தில் தங்கத்தை இருக்கையில் மறைத்து வைத்துவிட்டு இறங்கிவிடுவர்.

இவர்களின் கும்பலை சேர்ந்த ஒருவர் அந்த விமானம் உள்நாட்டு விமானமாக இயங்கும் போது அதே இருக்கையை தேர்வு செய்து, பயணம் செய்வார் அதில் மறைத்து வைக்கப்படும் கடத்தல் பொருட்களை வெளியே எடுத்துவருவது வாடிக்கை ஏன் என்றால், உள்நாட்டு விமானங்களில் சோதனைகள் அதிகம் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை, இவ்வாறு இருக்கும்போது

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு இன்று காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. உள்நாட்டு விமான பயணிகளிடம் சுங்கச்சோதனை கிடையாது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சுங்க அதிகாரிகள் இந்த விமான பயணிகளிடம் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கேரளாவை சேர்ந்த முகமது அநாஸ்(28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவருடைய கால்களில் அணிந்திருந்த ஷு சாக்ஸ்க்குள் மறைத்து வைத்திருந்த 1.28 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகளை விமான சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு கடத்தல் ஆசாமி திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டார்.

அதே கடத்தல் கும்பலை சேர்ந்த இவர், திருவனந்த புரத்திலிருந்து இந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக டிக்கெட் எடுத்து ஏறிவந்துள்ளார். விமானம் நடுவானில் பறந்த போது ஏற்கனவே சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை எடுத்து தனது கால் ஷு சாக்ஸ்களில் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்தார்.

அதைப்போல் லக்னோவிலிருந்து இன்று காலை சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்த மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளை சுங்கத்துறைசோதனையிட்டனர்.

சென்னையை சேர்ந்த நைனார் முகமது(30) என்ற பயணியை சோதனையிட்டனர். அவருடைய ஷு சாக்ஸ்களில் மறைத்து வைத்திருந்த 446 கிராம் தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இரு உள்நாட்டு பயணிகளிடமிருந்து ரூ.80 லட்சம் மதிப்புடைய 1.72 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Tags

Next Story
ai business transformation