சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் இன்று நிழல் இல்லா தினம்

சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் இன்று நிழல் இல்லா தினம்
நிழல்கள் என்பது நம்மை என்னாலும் பின் தொடரும் அரிய அறிவியல் நிகழ்வு. இந்த நிழல்கள் வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் ஒரு சில மணித்துளிகளுக்கு நம்மை பின் தொடராது. அந்த நாளை தான் நாம் நிழல் இல்லாத நாள் என்கிறோம். இந்த அறிவியல் நிகழ்வு சென்னையில் இன்று சரியாக 12.07 மணியளவில் ஏற்பட்டது.
இந்நிலையில் நிழல் என்பது என்ன? நிழல் இல்லாத நாள் என்றால் என்ன? என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஒளி ஊடுருவாத பொருளின் மீது ஒளிபடும் போது அப்பொருள் ஒளியைத் தடுத்துவிடும். அப்போது நிழல் உருவாகும். அதேபோல சூரிய ஒளி நம்மீது படும் போது நமது உடல் சூரியனின் ஒளியை தடுக்கும். அப்போது 'நிழல்' உண்டாகும். சூரியன் உங்களுக்கு பின்னால் இருந்தால் உங்களது நிழல் முன்னால் விழும். இதற்கு மாறாக சூரியன் முன்னால் இருந்தால் நிழல் பின்னால் விழும். அதேபோல சூரியன் இடது புறத்தில் இருந்தால் நிழல் வலது புறத்தில் உருவாகும். மாறாக வலது புறத்தில் இருந்தால் நிழல் இடது புறம் உருவாகும்.
சூரியன் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது சூரிய ஒளி செங்குத்தாக நம் மீது படும். அப்போது நிழல்கள் நமது கால்களுக்கு அடியில் படும். இந்த நிகழ்வு கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகை (tropic of capricorn) ஆகிய இரண்டு எல்லைகளுக்கு உட்பட்ட நாடுகளில் உணரப்படும். இதற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் சூரியன் மேல்நிலையை அடையாது. அதனால் அந்தப் பகுதிகளில் சூரிய ஒளி எப்போதுமே செங்குத்தாக விழாது. இதனால் அங்கு இந்நிகழ்வு உணரப்பட முடியாது.
அதன்படி இன்று சூரிய வெளிச்சம் சரியாக 13 டிகிரியில் வரும். இதனால் இந்த டிகிரி அச்சுரேகையிலுள்ள நகரங்களான சென்னை, பெங்களூரு மற்றும் மங்களூரு ஆகிய பகுதிகளில் சூரியன் தலைக்கு நேர் மேல் வரும். அப்போது நிழல் இல்லாத நிகழ்வு ஏற்படும். இந்த மூன்று நகரங்களில் ஒரே நேரத்தில் நிழல் இல்லாத நிகழ்வு நடைபெறாது.
ஏனென்றால் பூமி ஒரு டிகிரி சுற்றுவதற்கு நான்கு நிமிடங்களாகும். அதனால் சென்னையில் இந்த நிகழ்வை அனுபவித்த பத்து நிமிடங்களுக்கு பிறகு பெங்களூருவில் இந்நிகழ்வு ஏற்படும். அதனைத்தொடர்ந்து மங்களூருவில் இதே நிகழ்வு நடைபெறும். சூரியன் ஜுன் மாதம் 21-22 தேதி கடகரேகையின் மேலே இருக்கும்.அதேபோல டிசம்பர் மாதம் 21-22 ஆம் தேதி மகரரேகையின் மேல் இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு முன்னும் ஒரு முறை பூமியில் நிழல் இல்லாத நாள் வரும். அதன்படி 'நிழல் இல்லாத நாள்' ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இரண்டு முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu