முதல்வர் தனிப்பிரிவுக்கு செலவின்றி ஆன்லைனில் புகார் அளிக்கலாம்
முதல்வர் தனிப்பிரிவில் ஆன்லைனில் புகார் அளிக்கலாம் .இதற்கு பணம் செலுத்தி படிவம் பெற தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை : தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள், துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான வதந்தி மக்களிடையே சில தனிப்பட்ட நபர்களால் பரப்பப்பட்டு வருவதாகவும், அதை நம்பி மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக்கள் குறிப்பிட்ட படிவங்களை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாக தெரியவந்துள்ளது.
முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறுவழிகளில் பெறப்படும் (www.cmcell.tn.gov.in) முதலமைச்சர் உதவிமையம் (cmhelpline.tnega.org) மற்றும் மின்னஞ்சல் (cmcell@tn.gov.in) அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.
ஆகையினால், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக குறிப்பிட்ட படிவத்தில் தான் மனுக்களை அளிக்க வேண்டும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தொற்றுபரவல் காரணமாக தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக பொதுமக்கள் கூடுவதை தவிர்த்து, இணைய வழி சேவைகளை பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu