திருவொற்றியூர் அரசு கல்லூரியில் பழுதடைந்த கட்டிடங்களை எம்எல்ஏ ஆய்வு
திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கல்லூரியில் சேதமடைந்த கல்லூரி கட்டிடங்களை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு பூந்தோட்ட துவக்க பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடங்களில் இந்த கல்லூரி துவக்கப்பட்டது. இந்த கல்லூரி அமைந்துள்ள கட்டிடங்கள் அனைத்தும் 20 ஆண்டுகள் பழமையானவையாகும்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் கல்லூரி கட்டிடங்கள் விரிசலடைந்து மிகவும் சேதமடைந்துள்ளன. கல்லூரி அலுவலகம், வகுப்பறைகள் அமைந்துள்ள கட்டிடம் என அனைத்து கட்டிடங்களும் மிகுந்த சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் கல்லூரியில் சேதமடைந்த கல்லூரி கட்டிடங்களை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கல்லூரியின் கட்டிட மற்றும் அடிப்பட்டை தரங்கள் குறித்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கல்லூரி மாணவர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கல்லூரியின் நிலையை கேட்டறிந்து பின்னர் விரைவில் கல்லூரியை முழுவதுமாக தயார் செய்து தருவோம் என உறுதியளித்தார்.
இந்த கல்லூரியை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே ரீட் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் பூப்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு திருவொற்றியூர் பூப்பந்தாட்ட சங்கத்தினருக்கு நிதியுதவி வழங்கினார். இந்த ஆய்வின்போது திமுக பகுதி செயலாளர் தனியரசு, கல்லூரி முதல்வர் அரசு ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu