திருவொற்றியூர்- கோவளம் வழித்தடத்தில் நேரடி மாநகரப் பேருந்து வசதி தொடக்கம்

திருவொற்றியூர்- கோவளம்  வழித்தடத்தில் நேரடி மாநகரப் பேருந்து வசதி தொடக்கம்
X
திருவொற்றியூர் - கோவளம் இடையே 109 டி என்ற வழித்தடத்தில் மாநகரப் பேருந்து போக்குவரத்து வசதி தொடக்கம் .

திருவொற்றியூர் - கோவளம் இடையே 109 டி என்ற வழித்தடத்தில் மாநகரப் பேருந்து போக்குவரத்து வசதியை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி. சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர் ஆகியோர் இணைந்து கொடியசைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தனர்.

திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தினமும் சாந்தோம், அடையார், திருவான்மியூர், ஆகிய பகுதிகளுக்கு வேலைக்கு செல்ல பாரிமுனை சென்று அங்கிருந்து பேருந்து மூலமாகவோ, புறநகர் ரயில்கள் மூலமாகவோ பயணிக்கின்றனர் . மேலும் வடசென்னை தென் சென்னை இடையே அமைந்துள்ள மீனவ கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் உறவினர்களை சந்திக்கவும் வேண்டுமெனில் இரண்டு மூன்று பேருந்துகள் மாறி தான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது திருவொற்றியூர் கோவளம் இடையே ஏற்கனவே தொடங்கப் பட்டிருந்த பேருந்து வசதி சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது இதனையடுத்து இந்த வழித்தடத்தில் மீண்டும் பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவொற்றியூர் கோவளம் இடையே மாநகர பேருந்து வசதி தொடங்கி வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது. புதிய பேருந்து வசதியை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் கே பி சங்கர் (திருவொற்றியூர்) ஐட்ரீம் மூர்த்தி (ராயபுரம்), எபினேசர் (ஆர்கே நகர்) ஆகிய மூன்று எம்எல்ஏக்களும் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த வழித்தடத்தில் மொத்தம் நான்கு பேருந்துகள் தலா நான்கு தடவை இரு ஊர்களுக்கும் இடையே இயக்கப்படும். இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு பிறகு மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் கூறியது, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து மிக விரைவாக நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் இதனடிப்படையில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி புதிய பேருந்து வசதி குறித்து மூன்று எம்எல்ஏக்களும் தமிழக முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். உடனடியாக போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் பார்வைக்கு இந்த மனுக்கள் கொண்டு செல்லப்பட்டது இந்த மனுக்களை பரிசீலித்த அமைச்சர் உடல்ரீதியாக இந்த வழித்தடத்தில் பேருந்து வசதியை தொடங்கிட உத்தரவிட்டார். இந்த பேருந்து வசதி தொடங்கிவைக்கப்பட்டதன் மூலம் வடசென்னை பகுதியில் வாழும் பொதுமக்கள் இனி நேரடியாக தென் சென்னை பகுதியில் உள்ள திருவான்மியூர், அடையார், நீலாங்கரை, கோவளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிரமமின்றி சென்று வர இயலும். முன்பு ரூ. 60 வரை செலவான பேருந்து கட்டணம் தற்போது இப்புதிய வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்ட தன் மூலம் திருவொற்றியூர் கோவில் பயணம் செய்ய ரூ. 47 மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெளியூர்களுக்கு நேரடி விரைவு பேருந்து வசதி: வெளியூர் செல்வதற்கான புதிய பேருந்து நிலையம் ஊரப்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது புதிய பேருந்து நிலையம் வட சென்னை பகுதியில் இருந்து நீண்ட தொலைவில் இருப்பதால் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோவை, நாகப்பட்டினம், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடியாக விரைவு பேருந்து வசதிகளை ஏற்படுத்திட முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கலாநிதி வீராசாமி.

இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆபிரகாம், மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.நடராஜன், திமுக பொதுச்செயலாளர் தனியரசு, திமுக நிர்வாகிகள் கேபி சொக்கலிங்கம், குறிஞ்சி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!