திருவிக நகர் மண்டலத்தில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு

திருவிக நகர் மண்டலத்தில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிப்பு
X
பைல் படம்.
சென்னை, திருவிக நகர் மண்டலத்தில் அதிமுக வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு சின்னம் மறுக்கப்பட்டது.

சென்னை, திருவிக நகர் மண்டலத்தில் நேற்று வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 74 வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுதா என்பவரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவர் வியாசர்பாடி சிந்தாமணி கூட்டுறவு நியாய விலை கடையில் வேலை செய்து முறைகேடு காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். வேட்புமனுவில் இந்த தகவலை முறையாக தெரிவிக்காத காரணத்தினால் இவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர் உரிய விளக்கம் அளிக்காததால், தேர்தல் அதிகாரி சண்முகம் நேற்று சுதாவின் வேட்புமனுவை நிராகரித்தார். அவருக்கு பதில் மாற்று வேட்பாளராக அதே வார்டில் திவ்யா என்ற நபர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டது.

இதேபோல் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 67 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹேமலதா என்பவர் படிவம் சி என்ற படிவத்தில் முறையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் அவர் பாஜக வேட்பாளராக போட்டியிட முடியாத சூழ்நிலை இருந்தது.

இதனால் இவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரி பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் ஹேமலதா போட்டியிட முடியாது என தெரிவித்தார். இதனால் அவர் அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ஹேண்ட்பேக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது