காயத்திற்காக சென்றவருக்கு வயிற்றுக்குள் ஊசி வைத்து தையல் போட்ட அவலம்: பரபரப்பு
வயிற்றுக்குள் ஊசி.
சென்னை, புளியந்தோப்பு பி.கே காலனி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் வயது 28. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 30ஆம் தேதி வேலை செய்யும் இடத்தில் இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக புளியந்தோப்பு பட்டாளம் டிம்லஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு ரஞ்சித் குமாருக்கு வயிற்றுப்பகுதியில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளன. மீண்டும் மூன்று நாட்கள் கழித்து வரும்படி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை முடித்துக் கொண்டு ரஞ்சித்குமார் வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் ரஞ்சித் குமாருக்கு மருத்துவமனை சார்பில் இருந்து தொலைபேசி மூலம் அழைத்துள்ளார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கூறியதால் ரஞ்சித்குமார் சென்றுள்ளார். அப்போது தையல் பிரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
நேற்று தானே தையல் போட்டிருக்கு இன்று ஏன் தையல் பிரிக்க வேண்டும் என ரஞ்சித்குமார் கேட்டுள்ளார். இரண்டு தையல்கள் மட்டும் பிரிக்க வேண்டும் காயம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்போது ரஞ்சித் குமாருக்கு வயிற்றில் போடப்பட்ட தையல்களில் இரண்டை பிரித்த அங்கு இருந்த பணியாளர்கள் வயிற்றுக்குள் விரல்களை விட்டு பார்த்து ஏதாவது குத்துகிறதா என கேட்டுள்ளனர். ரஞ்சித்குமார் ஆமாம் எனக் கூறியுள்ளார்.
உடனடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி ஸ்கேன் எடுத்து வரும்படி அனுப்பி உள்ளனர். ரஞ்சித்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் எடுத்துள்ளார். அப்போது வயிற்றில் சிறிய அளவிலான ஊசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்குமார் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் மீண்டும் ஆபரேஷன் செய்து ஊசியை பத்திரமாக அப்புறப்படுத்திவிட்டு பணம் தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த ரஞ்சித் குமார், நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். நேற்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த ஊசி அகற்றப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித்குமார்புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. வயிற்றுக்கு தையல் போடப்படும் ஊசியை தையல் போட்டு விட்டு அதன் பிறகு வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்து அனுப்பிய சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஞ்சித்குமார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu