கருத்து மோதல்கள் கலவரமாக மாறக்கூடாது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கன்னிகாபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சென்னை திரு-வி-க நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட 71 மற்றும் 72வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கன்னிகாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், திமுக வாக்கு சேகரிப்பில் மக்களிடையே ஆதரவு இல்லை என்றும், அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்றார்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்றும், கேஸ் மானியம், ஆயிரம் ரூபாய் வாக்குறுதி என்ன ஆனது, சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு என்ன நிதி உதவி செய்தார்கள் என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், இவற்றையெல்லாம் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் மக்களை நேரிடையாக சந்திக்க முடியாத முதலமைச்சர் காணொளி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக கூறினார்.
கருத்து மோதல்கள் இருக்கலாம்; ஆனால் வன்முறை கலாச்சாரம் இருக்க கூடாது என்றும், பா.ஜ.க அலுவலகம் பெட்ரோல் குண்டு வீச்சு கண்டிக்கதக்கது என்றார்.
இவ்விவகாரத்தில் காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு சுதந்திரம் இல்லாமல் இருப்பதாகவும், இதில் சரியான நடவடிக்கை இல்லை எனில் நாளை அதிமுக அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிடுவார்கள். எனவே காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால் என்.ஐ. ஏ விசாரணை கோருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் நெடுஞ்சாலையில் இருக்கும் ஒட்டல்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கின்றனர். அதனால் தான் உணவகம் மீது நடவடிக்கை இல்லை என்று குற்றஞ்சாட்டிய ஜெயக்குமார், முதுநிலை ஆசிரியர் தேர்வு மாவட்டம் விட்டு மாவட்டம் தேர்வு எழுத கல்வித் துறை கட்டாயப்படுத்துவது சிரமத்தை ஏற்படுத்துவதுபோல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu