திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம் அதிரடி…

திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம் அதிரடி…
X

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சரவணன். (கோப்பு படம்).

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம். பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவரான இவரின், நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலியிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பரமானந்தம் நிலத்தின் ஒரு பகுதியை போலி ஆவணத்தின் மூலம் சஇளறஅ பெயர் மாற்றம் செய்தனராம்.

இந்த நிலையில், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமானந்தம் திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனு மீதஉ நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் பரமானந்தம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சரவணனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்துமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

சிவந்திப்பட்டியில் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரமானந்தம் தாக்கல் செய்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சம்பந்தமான அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 10.06.2022 அன்று அறிவிக்கை (Notice) அனுப்பப்பட்டது.

அந்த அறிக்கையை அவர் பொருட்படுத்தாததால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதைத் தெரியப்படுத்தும் அறிவிக்கையில், உரிய பதில் தராவிட்டால் விளைவு என்ன என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த அறிவிக்கையைப் பெற்றுக் கொண்ட பின்னரும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அனுப்புவதை வேண்டுமென்றே தவிர்த்து வந்ததன் காரணமாக 27.10.2022 அன்று சம்பந்தப்பட்ட கோப்புகளுடன் ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை (summons) அனுப்பப்பட்டது.

அந்த அழைப்பாணையைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆணையத்தின் அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ளபடி 27.10.2022 அன்று ஆஜராகத் தவறிவிட்டார். அப்போதே அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.

இருந்தபோதிலும், மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி 30.11.2022 அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும். அவ்வாறு ஆஜராகும் போது ஆணையத்தின் அழைப்புகளை அலட்சியப்படுத்தியதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையச் சட்டம். 2021 பிரிவு 9-இன் படி ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அழைப்பாணைகளுக்குப் பின்னரும், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் மேற்சொன்ன காரணம் கேட்கும் அறிவிப்புக்கு பதில் காவல் கொடுக்கவோ, அழைப்பாணையில் கட்டளையிட்டது போல நேரில் ஆஜராகவோ தவறி இருக்கிறார்.

தமக்குப் பதிலாக 30.11.2022 அன்று ஆஜராக மாரிராஜன் என்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரை இந்த ஆணையத்திற்கு அனுப்பி வைத்து இருக்கிறார். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இத்தகைய செயல். "ஆணையத்தின் உத்தரவுகள் தம்மைக் கட்டுப்படுத்தாது" என்ற அவரது கருத்தினை வெளிப்படுத்துவதாகவும், ஆணையத்தில் நேரில் ஆஜராவதைத் தம்முடைய தகுதிக்குக் குறைவானது என அவர் கருதுவதாகவும் அமைகிறது.

எனவே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டம், 2021 பிரிவு 9 இன் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனுக்கு ரூ. 500 (ரூபாய் ஐநூறு மட்டும்) அபராதம் விதித்து இந்த ஆணையம் உத்தரவிடுகிறது.

மேலும், கண்காணிப்பாளரைக் கைது செய்து, ஆணையத்தின் முன் விசாரணைக்கு 28.12.2022 அன்று ஆஜர்படுத்துமாறு பிணையில் விடக்கூடிய (Bailable warrant) பிடி ஆணை தென் மண்டல காவல் துறை தலைவருக்கு (Inspector General of Police, South Zone) அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

அபராதத் தொகையை விதிமுறைகளைக் கடைப்பிடித்து வசூல் செய்ய உத்தரவு நகல் ஒன்றினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்படுகிறது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil