தமிழச்சி, தமிழிசை, தமிழ்ச்செல்வி! தமிழ்மயம் நிறைந்துள்ள தென் சென்னை தொகுதி

தமிழச்சி, தமிழிசை, தமிழ்ச்செல்வி!  தமிழ்மயம் நிறைந்துள்ள தென் சென்னை தொகுதி
X
தமிழச்சி, தமிழிசை, தமிழ்ச்செல்வி என தென் சென்னை எங்கும் தமிழ்மயம் நிறைந்துள்ளது. இறுதியில் வெற்றி யாருக்கு என்பதை பொதுமக்கள்தான் தீர்மானிப்பார்கள்

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி! தமிழ்நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதிகளில் முதன்மையானதாக தென் சென்னை மக்களவை தொகுதி விளங்குகிறது.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம், தியாகராய நகர் உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கி இருந்த தென்சென்னை தொகுதி, மறுசீரமைப்புக்கு பின்னர் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது.

திமுக 9 முறை, காங்கிரஸ் 5 முறை, அதிமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா, முன்னாள் நிதி அமைச்சர் டிடிகே கிருஷ்ணமாச்சாரி, முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன், முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன், நடிகை வைஜெயந்தி மாலா ஆகியோர் தென் சென்னை தொகுதியில் இருந்து நாடாளுமன்றம் சென்ற பிரபலங்களாக உள்ளனர்.

1996,1998, 1999, 2004 தேர்தல்களில் தொடர்ந்து வென்ற டி.ஆர்.பாலு தென் சென்னையில் அதிக தேர்தல்களில் வெற்றி பெற்ற எம்.பியாக உள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தனது 26ஆவது வயதில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே இளம் வயது எம்பி என்ற பெருமையை பெற்றார்.

2019 நாடளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்க பாண்டியன் 564,872 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் 3,02,649 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரங்கராஜன் 1,35,465 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ.ஜே.ஷெரின் 50,222 வாக்குகளையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா 29,522 வாக்குகளையும் பெற்றனர்.

தற்போது திமுக சார்பில் தற்போதைய எம்பியான தமிழச்சி தங்கபாண்டியன் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஜெயவர்தனும், பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தராஜனும், நாம் தமிழர் கட்சி சார்பில் பேராசிரியர் தமிழ்ச்செல்வியும் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

கடந்த முறையை போலவே தற்போதும் திமுக கூட்டணி வலுவாக உள்ளதால் தமிழச்சி தங்க பாண்டியன் இதனை சாதகமாக கருதுகிறார்.

அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் ஜெயவர்தனுக்கு எம்பியாக நின்று வென்ற அனுபவமும், தோற்ற அனுபவமும் கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழச்சி தங்கபாண்டியனின் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து தொடர் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

பாஜகவை பொறுத்தவரை தென்சென்னை தொகுதிக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்திற்கு வந்துள்ளார் தமிழிசை சவுந்தராஜன். தான் வசிக்கும் விருகம்பாக்கம் தொகுதி மக்களும், தி.நகர் மற்றும் மயிலாப்பூரில் நிறைந்து வாழும் பிராமணர்கள் ஓட்டுக்களும், பிரதமர் மோடியின் ஆட்சியை விரும்புவோர்களின் ஓட்டுக்களும் தன்னை டெல்லி வரை சென்று கரைசேர்த்துவிடும் என நம்புகிறார்.

தமிழச்சி, தமிழிசை, தமிழ்ச்செல்வி என தென் சென்னை எங்கும் தமிழ்மயம் நிறைந்துள்ளது. இறுதியில் வெற்றி யாருக்கு என்பதை இறுதி எஜமானர்களான பொதுமக்கள்தான் தீர்மானிப்பார்கள்,

Tags

Next Story