புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை
X

புத்தாண்டு  (கோப்பு படம்)

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, பொதுமக்களிடம் அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் காவல் ஆணையா்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் சுதாகா் ஆகியோர் கூறியதாவது

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இரவு நடைபெறும் 2024-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் எவ்வித அசம்பாவிதமும் இன்றி, மகிழ்ச்சியுடன் நடைபெறுவதற்கு பெருநகர காவல்துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக காவல் துறை உயா் அதிகாரிகள் உள்பட 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா். காவல்துறையினருக்கு உதவியாக சுமார் 1,500 ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை (டிச.31) இரவு 9 மணியில் இருந்து சென்னை முழுவதும் 420 இடங்களில் வாகன தணிக்கை நடைபெறும். கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள் பந்தயத் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (டிச.31) மாலை முதல் திங்கள்கிழமை (ஜன.1) வரையிலும் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி கிடையாது.

மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல்துறையினர், குதிரைப்படைகள், மணலில் செல்லக்கூடிய ஏடிவி வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். மெரீனா, சாந்தோம், எலியட்ஸ், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட முக்கியமான 48 இடங்களில் தாற்காலிக உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது.

மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகள் ‘டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அருகே ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக முக்கியமான இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். நட்சத்திர ஹோட்டல்கள், மதுபானக் கூடங்கள் என அனைத்து இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். கொண்டாட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் அத்துமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநா் உரிமமும் தற்காலிக ரத்து செய்யப்படும். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஏற்கெனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 125 பேரை அழைத்து எச்சரித்துள்ளோம் என்றனா்.

தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதியில் 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். 160 ஊா்க்காவல் படையினா் காவல் துறையினருக்கு உதவும் வகையில் செயல்படுவார்கள். உத்தண்டி, நைனார்குப்பம், பனையூா், முட்டுக்காடு, கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!