தென்சென்னை மக்களவை தொகுதி: ஒரு பார்வை

தென்சென்னை மக்களவை தொகுதி: ஒரு பார்வை
X
பேரறிஞர் அண்ணா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, முரசொலிமாறன், வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதியாகத் திகழ்கிறது தென் சென்னை.

விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது தென் சென்னை மக்களவைத் தொகுதி.

இந்த தொகுதி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் தியாகராயநகர், கோயம்பேடு மார்கெட் போன்ற தமிழகத்தின் வணிக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளும் இந்த தொகுதியில் உள்ளன.

இந்த தொகுதியில் 1957ஆம் ஆண்டு முதன்முதலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட டி.டி.கிருஷ்ணமாச்சாரி வெற்றிப் பெற்றார்.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.

அதற்கடுத்து 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட முரசொலி மாறன் வெற்றி பெற்றார்.

1962ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் இந்த தொகுதியில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.

அதன்பிறகு 1977 மற்றும் 1980ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸை சேர்ந்த இரா.வெங்கட்ராமன் வெற்றிப் பெற்றார்.

இந்த தொகுதியில் நடிகை வைஜயந்தி மாலா, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு இரண்டு முறை வெற்றிப் பெற்றுள்ளார்.

எனவே 1977ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை இந்த தொகுதி காங்கிரஸ் வசம் இருந்துள்ளது.

1991ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த ஸ்ரீதரன் வெற்றிப் பெற்றார். அதன்மூலம் இந்த தொகுதியில் அதிமுக தனது முதல் வெற்றியைப் பதித்தது.

அதனை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்த தொகுதியில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலுவே வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்த தொகுதியில் திமுக ஏழு முறை தனது வெற்றியை பதித்துள்ளது.

ஆனால் அதன்பிறகு 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அதிமுக வெற்றிப் பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் திமுக, அதிமுக, மநீம இடையே மும்முனை போட்டி நிலவிய போதிலும், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அவர் 5 லட்சத்து 64 ஆயிரத்து 872 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுகவின் ஜெயவர்தன் 3 லட்சத்து 2 ஆயிரத்து 649 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மக்கள் நீதி மய்யத்தின் ரங்கராஜன், ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார்

தொகுதியின் முக்கிய பிரச்னை

தி.நகர் வர்த்தக வணிக பகுதி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியான திருவான்மியூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது.

இந்த தொகுதியில் உள்ள பெருங்குடி குப்பை மேடு அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை அங்கு சரியாக கையாளப்படவில்லை என்பது அந்த பகுதியில் உள்ள மக்கள் வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு.

வேளச்சேரி மற்றும் சைதாப்பேட்டை போன்ற இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையும் இங்கு நிலவுகிறது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!