வெள்ளத்தில் சிக்கிய தந்தையை தேடி சென்ற மகன் உயிரிழப்பு: இது சென்னை சோகம்

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நடந்த மீட்பு பணி (கோப்பு படம்)
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய தந்தையை மீட்க சென்ற மகன் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகள், மக்கள் வசிக்கும் தெருக்கள் எல்லாம் ஏரிகள் போல் காட்சியளித்தது. வெள்ளம் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கி வருகிறது. தண்ணீரில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் படகுகள் மூலம் மீட்டு வருகிறார்கள்.
சென்னையில் பெருங்குடி, மடிப்பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை பகுதியில் தான் மிக அதிக அளவில் ஒரே நாளில் 73 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் வெள்ள பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு இன்னும் வெள்ள நீரும் வடியவில்லை. வீடுகளில் சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்படவில்லை .
பள்ளிக்கரணை காமகோடி நகரை சேர்ந்த பகுதியில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. இங்கு வசித்த முருகன் என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவர் வெள்ள நீரில் சிக்கி எங்காவது தவித்துக் கொண்டிருப்பார் என கருதியால் அவரது மகன் அருண் அவரை தேடி பல்வேறு இடங்களுக்கும் சென்றார்.
இப்படி சென்ற அவர் ஒரு கால்வாய் பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. தந்தையை தேடிச் சென்ற அருண் உயிரிழந்த நிலையில் அவரது தந்தையான முருகன் எப்படியோ தப்பி வீடு வந்து சேர்ந்தார். வெள்ளத்தில் இருந்து தப்பினாலும் மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரால் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu