சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்: பெண் உள்பட 5 பேர் கைது
தங்கக்கடத்தல் - காட்சி படம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இலங்கையில் இருந்து சென்னை வந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்ததில் அதில் எதுவும் இல்லாததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 304 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
அதேபோல் உள்நாட்டு முனையத்தில் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்த போது, எதுவும் இல்லாததால் தனியறையில் சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.37 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள 703 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
மேலும், துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.44 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 852 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
கடந்த 2 நாட்களாக சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் பெண் உள்பட 5 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 3 லட்சத்து ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 859 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu