சென்னை ஷாகின்பாக் போராட்டக்குழுவினர் தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை ஷாகின்பாக் போராட்டக்குழுவினர் தமிழக அரசுக்கு கோரிக்கை
X
சென்னையில் ஷாகின்பாக் போராட்டக்குழுவினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து பேட்டி அளித்தனர்.
சென்னை ஷாகின்பாக் போராட்டக்குழுவினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பேட்டி அளித்தனர்.

தமிழகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் இருக்கும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகளையும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சென்னை ஷாகின்பாக் போராட்ட குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஷாகின்பாக் கூட்டமைப்பின் தலைவர் லத்தீப் கூறியதாவது,

தமிழகத்தில் தற்போது உள்ள இந்த அரசாங்கம் பல நல்ல செயல்களை செய்து கொண்டிருக்கிறது. நம் சமுதாய மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்ல சேவைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஷாகின்பாக் போராட்டும் நிலைமை வராது என்று நாங்கள் நினைக்கிறோம். முதலமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் இந்த சிறைக்கைதிகள் விடுதலை விவகாரத்தில் தலையிட்டு நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து வாக்குறுதி கொடுத்திருக்கிறார்

தமிழக அரசு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படும் என்கின்ற அரசாணையை வெளியிட்டிருந்தார்கள். அரசாணையை வெளியிடுவதற்கு முன்னால் எங்கள் சமூக மக்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

இந்த தமிழக அரசு ஜாதி, மத, பேதமில்லாமல் மிக சிறந்த முறையில் தமிழகத்தை வழிநடத்துகின்ற தமிழக முதலமைச்சர் ஜாதி மதம் பாராமல் அனைவரையும் விடுவிப்பார் என்று ஒரு மகிழ்ச்சியான சூழலில் இருந்தோம். ஆனால் அரசாணையில் மத சம்பந்தப்பட்ட, குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட யாரையும் இதில் விடுவிக்க முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

25 ஆண்டுகளாக முஸ்லீம் சமூக மக்களின் கோரிக்கையாக உள்ள சிறைக்கைதிகள் விடுதலை மற்றும் இதர தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வைத்திருந்தோம். மேலும் விசாரணை என்ற பெயரில் எந்த தண்டனையும் அறிவிக்காமலே 25 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மக்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய இந்த தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.

சிறைக்கு சென்ற ஒருவரின் கடைசி இருப்பிடமாக சிறைத்துறையும், சிறைச்சாலையும் இருக்க கூடாது. சிறைத்துறை என்பது தவறு செய்பவர்களை திருந்தி வாழ வைக்கின்ற ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொள்ளக்கூடிய ஒரு இடமாகத்தான் சிறைச்சாலை இருக்க வேண்டுமே தவிர மரணமடையும் வரை அங்கேயே அடைத்து வைக்கின்ற நிலை இருக்கக்கூடாது.

மக்கள் பிரச்சனை என தமிழக முதலமைச்சருக்கு ஒரு போன் போட்டால் அவர்களை நேரடியாக போய் பார்த்து பிரச்சனையை தீர்க்கக் கூடிய ஒரு நல்ல மனம் படைத்தவராக முதல்வர் இருக்கிறார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கி, மின்சாரம் வழங்கி அந்த தெருக்களை சுத்தம் செய்து ஒரு நல்ல சூழலை உருவாக்கி இருக்கின்றார். ஸ்டாலின் ஒரு நல்ல முதலமைச்சர் என்பதில் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

எனவே கோவை சிறைக்கைதிகள், ஏழு தமிழர்கள் மட்டுமல்லாமல் விசாரணை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!