முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குபதிவு
சென்னை வண்ணாரப்பேட்டை 49-வது வார்டு வாக்குசாவடிகளை கைப்பற்றி தி.மு.க வேட்பாளர் இளைய அருணா தலைமையில் தி.மு.க-வினர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக அ.தி. மு.க-வினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு வந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர், திமுகவினரை தட்டிக்கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநரை ஒருவர் தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக-வை சேர்ந்தவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதனையடுத்து தி.மு.க-வைச் சேர்ந்த நரேஷ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகன்நாதனும் திமுகவினர் தன்னை தாக்கியதாக கூறி தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார்களின் அடிப்படையில் தண்டையார்பேட்டை போலீசார், ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல் பயங்கர ஆயுதங்களுடன் கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் உட்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் அதிமுக பிரமுகர் கொடுத்த புகாரின்பேரில் அடையாளம் தெரியாத 10 திமுகவினர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ள ஓட்டு போடவந்த தி.மு.க-வினரைப் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ராயபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதி முகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதால் அரசு உத்தரவை மீறி செயல்படுதல், தொற்று நோய் பரவல் சட்டத்தின் கீழ் இரு பிரிவு உள்பட 4 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்பட 113 பேர் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu