சென்னையில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் சோதனை ஓட்டம்

சென்னையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னையில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஈவிகே.சம்பத் சாலை, புரசைவாக்கம் தாசப்பிரகாஷ், வேப்பேரி ரித்தர்டன் சாலை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

சென்னையில் வாகன நெரிசலைத் தவிர்க்க ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 5 இடங்களில் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, காமராஜர் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மட்டுமின்றி, இதர சாலைகளிலும் அதிக நெரிசல் உள்ளது.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாதபடி, சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலை சந்திப்பில் பிரேத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குள் நின்றவாறு, போக்குவரத்து சிக்னல்களை போலீஸார் இயக்கி வருகின்றனர்.
கூண்டுக்குள் போலீஸார் நிற்பது தெரியாமல், சில வாகன ஓட்டிகள் சாலை விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்துகளும் நேரிட்டன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து, போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் தலைமையிலான போலீஸார், ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சின்னல்களை அமைக்க முடிவு செய்தனர்.
முதல்கட்டமாக வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகேயுள்ள ஈவிகே.சம்பத் சாலை, எழும்பூர் காந்தி இர்வீன் சாலை, வேப்பேரி ரித்தர்டன் சாலை, எழும்பூர் நாயர் பாலம் பகுதி, புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் ஆகிய 5 இடங்களில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
விரைவில் சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சிக்னல்களிலும், ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல்கள் படிப்படியாக அமைக்கப்பட உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கூறும்போது, ``ரிமோட் மூலம் போக்குவரத்து சிக்னல்களை இயக்குவதால், சாலை சந்திப்புகளில் நேரடியாக நின்றுகொண்டு, வாகனங்களின் எண்ணிக்கை, நெரிசலுக்கு தகுந்தவாறு ரிமோட் மூலம் பச்சை, மஞ்சள், சிவப்பு சிக்னல்களை உடனுக்குடன் மாற்றி அமைக்க முடியும். ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால்கூட நெரிசலின்றி கடந்து செல்ல உதவ முடியும். மேலும், பாதசாரிகள் சாலையைக் கடக்கவும் உதவ முடியும்'' என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu