சென்னையில் ரூ.150 கோடியில் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்

சென்னையில் ரூ.150 கோடியில் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்
X

கோப்பு படம் 

சென்னை கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.150 கோடியில் சுமார் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் வசதியை மாநகராட்சி அமைக்கவுள்ளது.

அண்மையில் பெய்த பலத்த மழை, சென்னை நகரை வெள்ளக்காடாக மாற்றியது. மழை நீர் செல்ல உரிய வடிகால் வசதியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.150 கோடியில் சுமார் 40 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக, மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் சென்னையின் விரிவாக்கப்பட்ட ராம்நகர், மடிப்பாக்கம், குபேர நகர், ராஜேஷ் நகர், காரப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில், கோவளம் வடிநிலப் பகுதியில் ரூ.1,714 கோடி மதிப்பில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

அதன்படி, கோவளம் வடிநிலப் பகுதியில் உள்ள ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் வெள்ளத்தால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படும் கண்ணன் காலனி, நேரு காலனி, நங்கநல்லூர், பி.வி.நகர், இந்து காலனி, நிவாசா நகர், சதாசிவம் நகர், ராம் நகர், குபேந்திரன் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

இங்குள்ள, 139 தெருக்களில் 27.20 கி.மீ. நீளத்துக்கு புதிய மழைநீர் வடிகால்கள், 95 தெருக்களில் 12.60 கி.மீ. நீளத்துக்கு பழுதடைந்த மழைநீர் வடிகால்களை மறுசீரமைக்கும் பணி என, 234 தெருக்களில் 39.80 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படும். இப்பணிக்கு, ஜெர்மன் நாட்டு வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டு, 3 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, ரூ.150.45 கோடியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!