சென்னை மெட்ரோ இரயில் குலுக்கலில் இதுவரை ரூ.11 லட்சம் மதிப்பில் பரிசுகள்

சென்னை மெட்ரோ இரயில் குலுக்கலில் இதுவரை ரூ.11 லட்சம் மதிப்பில் பரிசுகள்
X

பயனாளிகளுக்கு பரிசுகளை வழங்கும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி.

சென்னை மெட்ரோ இரயில் மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கலில் இதுவரை 330 பயணிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் மாதந்திர அதிர்ஷ்டக் குலுக்கலில் தேர்வு பெற்றவர்களுக்கு கடந்த 11 மாதங்களில் இதுவரை 330 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 2023 மார்ச் மாதத்திற்கான பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதாகவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) தெரிவித்துள்ளார்.

பதினொன்றாவது மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தலைமையில் நடைபெற்றது. பயனாளிகளுக்கு பரிசுகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வழங்கினார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், சென்னை மெட்ரோ இரயிலில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு பொருள் மற்றும் 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை (ரூ.2,500/- மற்றும் ரூ.50/- வைப்புத்தொகை மதிப்புள்ள) என்ற அடிப்படையில் கடந்த 11 மாதங்களில் 110 பயணிகளுக்கு தலா ரூ.4550 வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 500-க்கான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ இரயிலில் மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500/- மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்தியவர்களை மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு பொருள் என்ற அடிப்படையில் கடந்த 11 மாதங்களில் 110 பயணிகளுக்கு தலா ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்துக்கான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கி இதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500/-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளை மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450/- மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு பொருள் என்ற அடிப்படையில் கடந்த 11 மாதங்களில் 110 பயணிகளுக்கு தலா ரூ.3450 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 500-க்கான பரிசுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் கடந்த 11 மாதங்களில் இதுவரை 330 பயணிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ரூ.11 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), மார்க் மெட்ரோ இயக்குநர் முரளி மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்துகொள்ள அனைத்து மெட்ரோ இரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகலாம். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து இந்த பரிசுகள் வழங்கப்படுகின்றன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!