பிரதமர் மோடி சென்னை வருகை!: ஐந்தடுக்கு பாதுகாப்பு, போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் போக்குவரத்து மாற்றம் - கோப்புப்படம்
அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். பிற்பகல் 1.15க்கு மகாராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு செல்கிறார். பின்னர் மாலை 3.30 மணிக்கு கல்பாக்கம் அணு உலை மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார்.
அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி சென்னை வரும் நிலையில், போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையின் படி, "பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணா சாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் தடை செய்யப்படும்.
• மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை
• இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு
• மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை.
• அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு
• விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)
• அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை
• தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu