சென்னை மூலக்கடையில் மஞ்சள் பை திட்டத்தை மேயர் துவக்கி வைப்பு
சென்னை மாநகர ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சியை சென்னை மேயர் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர வடக்கு ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் வண்ணாரப்பேட்டை அரிமா சங்கம் இணைந்து தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மஞ்சள் பை உபயோகிக்கும் பழக்கத்தை பொது மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கில் மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டு ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மஞ்சள் பையை வழங்கினார். மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதல் உதவி உபகரணங்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து சென்னை முழுவதும் மீண்டும் மஞ்சள் பை கலாச்சாரத்தை ஏற்படுத்தவும், ஊர்க்காவல் படை வீரர்களுக்கு உதவும் நோக்கிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகர ஊர்க்காவல் படை வடக்கு மண்டல தளபதி விட்டோ பிளாக்கா, வண்ணாரப்பேட்டை அரிமா சங்க தலைவர் ஆரோக்கியதாஸ், அம்பேத்கர் அரிமா சங்கத்தை சேர்ந்த பரமசிவம், வண்ணாரப்பேட்டை அரிமா சங்க பொருளாளர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu