சிறுமி பாலியல் வன்முறை வழக்கு: காவலர் போக்ஸோ சட்டத்தில் கைது
சென்னை எம்கேபி நகரில் சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதால் 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவலரை போக்ஸோ சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி சமூக வலைதளம் மூலம் தன்னுடன் பழகிய சிறைக் காவலர் மகேஷ் தன்னை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காவலர் மகேஷ் மூலம் ஏமாற்றப்பட்டது தொடர்பாக சிறுமி வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் தன்னை சமூக வலைதளம் மூலம் பழகி காதலிப்பதாகக் கூறிய சிறைக் காவலர் மகேஷ் தன்னுடன் நெருங்கிப் பழகி இரண்டு முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முறையாக விசாரிக்காமல் தற்கொலை வழக்கு என பதிவு செய்து முடித்து வைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முறையாக விசாரணை செய்யவில்லை எனக் கூறி கடந்த ஆண்டு வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காவலர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மை எனத் தெரியவந்ததால் தற்போது மாதவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் மகேஷை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட சிறுமிக்கு அப்போது 16 வயது என்பதால் கைது செய்யப்பட்ட காவல் மகேஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரைபோலீசார் கைது செய்துள்ளனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu