கொடுங்கையூரில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

கொடுங்கையூரில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
X

தீ விபத்தில் சேதமடைந்த பிளாஸ்டிக் குடோன்.

சென்னை அருகே கொடுங்கையூரில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகர் 4வது பிரதான சாலையில், விஜயகுமார், வயது 45 என்பவர், பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். இதில் மூட்டை மூட்டையாக பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட புதிய பிளாஸ்டிக் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 8 மணி அளவில் பிளாஸ்டிக் குடோனில் இருந்து கரும்புகை வெளிவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார், வ.உ.சி நகர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, உடனடியாக விரைந்து தீயை அணைக்க முற்பட்டனர். எனினும் தீ மளமளவென பரவி கட்டிடம் முழுவதும் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் திபுதிபுவென எரியத் தொடங்கின. இதனால், கட்டிடம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!