சென்னையில் ஆட்டம் ஆரம்பம்: கவுன்சிலர் கணவர் அடாவடி

கவுன்சிலர் ஷர்மிளா, அவரது கணவர் கருணாநிதி
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கொய்யாத்தோப்பு சோலையம்மன் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் அப்பகுதியில் சொந்தமான வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று இவரை சந்தித்த அப்பகுதி 16-வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி வீடு கட்ட முறையாக அனுமதி பெற்றுள்ளீர்களா என்று விசாரித்துள்ளார்.
இந்த விசாரணையின் போது ஷர்மிளா காந்தியும் உடன் இருந்துள்ளார். அப்போது தேவி, இது தங்களின் சொந்த இடம், இங்கு வீடு கட்ட முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார். அப்போது அனுமதி பெற்ற டாக்குமென்டை கொடுங்கள் அதை சரிபார்த்துவிட்டு நாங்கள் சொன்ன பிறகுதான் கட்டுமான வேலைகளை தொடங்க வேண்டும் என்று கூறி உடனடியாக கட்டுமாண பணிகளை நிறுத்தியுள்ளார்.
இது குறித்து தேவி மீண்டும் கேட்டபோது, கட்டுமான பணிகளை தொடங்க கருணாநிதி லட்சக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேவி, மாமன்ற உறுப்பினர் அலுவலகம் சென்று கேட்டுள்ளார். ஆனால் அங்கு ஷர்மிளாவுடன் இருந்த சிலர் தேவியை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் கருணாநிதி எல்லை மீறி பேசியுள்ளார்.
இந்த பேச்சுக்களை தேவி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த பேச்சுக்கு இடையே என்னால் பணம் தர முடியாது எங்களது இடத்தில் நாங்கள் வீடு கட்டுகிறோம். அதற்கு உங்களுக்கு எதற்காக பணம் கொடுக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வந்துவிட்டு இப்படி செய்யலாமா? மேடம் நீங்கள் தானே கவுன்சிலர் உங்கள் கணவர் எதற்காக பேசுகிறார். நீங்கள் பேசுங்கள் நான் வீடியோ எடுத்துக்கொள்கிறேன் என கூறவே அனைவரும் அமைதியானார்கள்.
இதில் குறிப்பிடவேண்டிய அம்சம், கவுன்சிலர் அமர வேண்டிய இருக்கையில் அவரது கணவர் அமர்ந்துள்ளார். கவுன்சிலரோ பக்கத்தில் பிளாஸ்டிக் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.
இன்னும் மாமன்ற கூட்டம் தொடங்கப்படாத நிலையில், பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஒரு பெண்னை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ கட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதமே கடந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu