போக்குவரத்து விதி மீறலுல் அபராதம்: வீடுகளுக்கே சென்று இ-சலான் வழங்கும் காவல்துறை
சென்னையில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து உனடியாக அபராதம் வசூலிப்பதற்கு பெருநகர காவல்துறை சார்பில் இ-சலான் கருவி 2011-ஆம் ஆண்டு போக்குவரத்துப் பிரிவு காவலா்களுக்கு வழங்கப்பட்டது. இ-சலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களில் 91.7 சதவீதம் போ் அபராதத் தொகையை உடனே செலுத்தினா். ஆனால் அதன் பின்னா் வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை செலுத்தாமல் தாமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இதனால், அபராத தொகை வசூலாவது 20 சதவீதம் குறைந்தது. மேலும், 5 லட்சத்துக்கும் மேலான போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் அபராதம் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இதைத் தடுக்க, வாகன ஓட்டிகளில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு வழக்குப் பதியப்பட்டு செலுத்தாமல் இருக்கும் அபராதத்தை வசூலிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் சார்பில் அழைப்பு மையங்கள் (கால் சென்டா்கள்) 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டன. இதன் மூலம் போக்குவரத்து விதி மீறி வழக்குப் பதியப்பட்டு, அபராதம் செலுத்தாதவா்களை தொடா்பு கொண்டு நினைவூட்டி, அபராதத்தை வசூலித்தனா்.
இந்த நடவடிக்கை மூலம் திட்டம் தொடங்கப்பட்டு முதல் 6 மாதங்களில் 9,18,573 வழக்குகளில் ரூ.23 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 581 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு வழக்குப் பதியப்பட்டு, அபராதம் செலுத்தாதவா்களின் வீடுகளுக்கு காவல்துறையினர் நேரில் சென்று இ-சலான் ரசீதை வழங்கி, அபராதம் வசூலிக்கும் திட்டம் சென்னை காவல்துறை தொடங்கியுள்ளது.
இதில் முக்கியமாக மத்திய சாலை போக்குவரத்து துறையின் ஆவணங்களில் வாகனங்களின் பதிவு எண்களுடன், முறையான கைப்பேசி எண்கள் இணைக்கப்படாமல் இருக்கும் வாகன ஓட்டிகளுக்கு இவ்வாறு இ-சலான் ரசீது வழங்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர்தெரிவித்தனா்.
இதற்காக அந்தந்த போக்குவரத்து அமலாக்கப்பிரிவு காவல் நிலையங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் நிலுவையில் இருக்கும் போக்குவரத்து விதிமுறை வழக்குகளின் அபராதத்தை விரைந்து வசூலிக்க முடியும் என போக்குவரத்து காவல் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu