சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடமிருந்து சாட்டிலைட் போன் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் பயணிகளிடமிருந்து சாட்டிலைட் போன் பறிமுதல்
X

சென்னை விமான நிலையம் 

சென்னையில் இருந்து சேலம் செல்ல இருந்த விமானத்தில் 2 பயணிகள் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னையில் இருந்து சேலம் செல்லவிருந்த விமானத்தில், தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணம் செய்ய முயன்ற ரஷ்யாவைச் சேர்ந்தவர் உட்பட 2 பயணிகளிடமிருந்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களின் பயணத்தை ரத்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து சேலம் செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (மார்ச் 10) சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனை செய்து அனுப்பினர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் சேலம் செல்வதற்காக ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய பயணியும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பயணியும் வந்துள்ளனர். அப்பொழுது அவர்களது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள் அவரது கைப்பைக்குள் சாட்டிலைட் போன் இருப்பதை கண்டுபிடித்தனர்.

நமது நாட்டில் சாட்டிலைட் போன் உபயோகிக்க பாதுகாப்பு காரணங்களுக்காக, மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனுடன் பயணிகள் பயணம் செய்ய முயன்றது, பாதுகாப்பு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் இருவரிடமும் இருந்து சாட்டிலைட் போனை பறிமுதல் செய்து, அவரின் பயணத்தை ரத்து செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இது சாட்டிலைட் போன் அல்ல, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய விலை உயர்ந்த வெளிநாட்டு செல்போன்கள் என்று கூறி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தங்கள் நாட்டு சட்ட விதிகளின்படி, சாட்டிலைட் போனை பயணி ஒருவர் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்னை காரணமாக, சென்னையில் இருந்து சேலம் செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சுமார் அரை மணிநேரம் தாமதமாக, 62 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இதனையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ரஷ்ய பயணி உட்பட இரண்டு பேரிடமும் இருந்து பறிமுதல் செய்த செல்போன்களையும் சென்னை விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை விமான நிலைய காவல்துறையினர் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!