செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நாளை போக்குவரத்தில் மாற்றம்
சென்னையில், நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
India Chess Olympiad - மாமல்லபுரத்தில், கடந்த 28-ந்தேதி துவங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில், நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 9-ந்தேதி (நாளை) மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு நாடுகளை சார்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே வாகன நெரிசலை தவிர்க்க, சென்னை போக்குவரத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நாளை 3 மணி முதல் இரவு 9 மணி வரை, ராஜா முத்தையா சாலை, ஈ.வே.ரா பெரியார் சாலை, சென்ட்ரல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை மற்றும் ஈ.வே.ரா சாலை வழியாக செல்லலாம். அதே போல் ஈ.வி.கே சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வணிக நோக்கிலான வாகனங்கள் ஈ.வே.ரா சாலை, கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்லவும் அனுமதி இல்லை.
பிராட்வேயில் இருந்து வருகிற வணிக வாகனங்கள் குறளகம், தங்கச்சாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கி திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று, தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்த வேண்டும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள், அவர்களது பயண திட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என, போலீசார் கூறியுள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu