எண்ணூரில் கடலில் கலந்த எண்ணெய் கழிவு: ஹெலிகாப்டரில் ரசாயன பொடி தெளிப்பு
எண்ணூர் கடல் பகுதியில் மிதந்த எண்ணெய் படலம்
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அனைத்து இடங்களும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனமழையின் காரணமாக புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் எண்ணூர் முகத்துவாரத்தில் கலந்தது. அப்போது மழைநீருடன் கச்சா எண்ணை கழிவுகளும் கலந்ததால் முகத்துவார பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன.
மேலும் எண்ணை படலங்கள் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் படர்ந்து இருந்தது. இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதியிலும் அதிக அளவு எண்ணை கழிவுகள் கடலில் கலந்து படர்ந்து உள்ளன. இதனால் கடல் நீர் மாசுபடுவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதோடு கச்சா எண்ணை படலம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை கடலில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை எண்ணை கசிவு படர்ந்துள்ளது.
இந்த பகுதி மீன்பிடி தொழில் அதிக அளவில் நடைபெறும் என்பதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து கடலில் பரவி உள்ள எண்ணை கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் (ஓ.எஸ்.டி) என்னும் எண்ணெய் கரைப்பானை கடலில் தெளித்தனர்.
இதுதொடர்பாக கடலோர காவல்படை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், புயலுக்கு பின் ஏற்பட்ட வெள்ளத்தில் எண்ணெய் கசிவு கலந்தது குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 20 கி.மீட்டர்வரை எண்ணெய் கசிவு படர்ந்து உள்ளது.
இந்த கழிவுகள் மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் ஆயில் ஸ்லிட் டிசால்வன்ட் எனும் எண்ணெய் கரைப்பான் தெளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இன்று பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள 9 பேர் கொண்ட குழுவினர் எண்ணூரில் எண்ணை படர்ந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu