முகத்துவாரத்தில் மீண்டும் படியும் எண்ணெய்: ஆய்வு நடத்த மீனவர்கள் வேண்டுகோள்
முகத்துவாரத்தில் எண்ணெய் படலங்களை அகற்றும் பணி
மிக்ஜம் புயல் காரணமாக, பெருமழை கொட்டி தீர்த்தது. இதில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து, டிசம்பர் 5ம் தேதி அதிகபட்சமாக, வினாடிக்கு, 48,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
இதில், கடைமடை பகுதிகளான மணலி, மணலிபுதுநகர் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் ஒட்டிய எர்ணாவூர், திருவொற்றியூர் மேற்கு உட்பட பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், வெள்ளநீரில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவால் திருவொற்றியூர் மேற்கு, எர்ணாவூரில் பல வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
முகத்துவாரம் வரை சென்று கடலில் கலந்த எண்ணெய் கழிவால், எண்ணுாரின், தாழங்குப்பம் உட்பட, எட்டு மீனவ கிராமங்கள் நேரடியாகவும், 20 கி.மீ., துாரம் அதன் தாக்கம் இருந்ததால், திருவொற்றியூரின் 14 மீனவ கிராமங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டன.
மீனவர்கள் உதவியுடன் மும்பையின், சீ கேர் மரைன் சர்வீசஸ், விராஜ் உட்பட நான்கு பயிற்சிப் பெற்ற தனியார் நிறுவன குழுவினர் முகத்துவாரம், ஆறு, பகிங்ஹாம் கால்வாயில் படிந்த எண்ணெய் கழிவை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
இரு தினங்களுக்கு முன், முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பணிகள் இன்னும் முடியவில்லை என, மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முகத்துவாரம் நோக்கி எண்ணெய் கழிவு படலம் தொடர்ந்து வருவதால், தனியார் நிறுவன ஊழியர்கள், படகுகள் உதவியுடன் நேற்றும், கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விடாமல் துரத்தும் எண்ணெய் கழிவால், பல நாட்களுக்கு அகற்றும் பணி நீடிக்கும் நிலை வாய்ப்புள்ளது.
முகத்துவாரத்தில் இருந்து நீர்வழித்தடத்தில் மீண்டும் படிந்து வரும் எண்ணெய் படலம் குறித்த ஆய்வை தீவிரமாக மேற்கொண்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட காட்டுக்குப்பம், சடையங்குப்பம், பர்மா நகர் போன்ற இடங்களில், நீர்நிலையின் நடுவே இருக்கும் அலையாத்தி காடுகளின் தாவரங்களில் படிந்திருக்கும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவது எப்படி என, கேள்வி எழுந்துள்ளது.
காட்டுக்குப்பம் பகுதியில், மணற்திட்டின் மேல் எண்ணெய் படிந்த, சிறிய தாவரங்களை ஊழியர்கள் வெட்டி அகற்றினர். பெரிய அளவிலான தாவரங்களில் படிந்திருக்கும் எண்ணெய் கழிவுகளை எவ்வாறு அகற்றப் போகின்றனர் என்பது தெரியவில்லை.
தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடியும், அங்கு வாழும் பறவைகள், கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu