சென்னையில் பணியை முடித்த ‘நீலகிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம்

சென்னையில் பணியை முடித்த ‘நீலகிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம்
X

சுரங்கம் தோண்டும் பணியை முடித்து வெளியே வந்த இயந்திரம்.

சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்டத்தில் நீலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ இரயில் சேவையை சென்னையில் துவங்கியது. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் 1 மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வழித்தடம் 3(45.4 கி.மீ):

மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை

19 உயர்நிலைப் பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள்

28 சுரங்கப்பாதை இரயில் மெட்ரோ இரயில் நிலையங்கள்.

வழித்தடம் 4 (26.1 கி.மீ):

கலங்கரை விளக்கம் மெட்ரோ இரயில் நிலையம் முதல் பூந்தமல்லி பணிமனை வரை

18 உயர்நிலைப் பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள்

9 சுரங்கப்பாதை இரயில் மெட்ரோ இரயில் நிலையங்கள்.

வழித்தடம் 5 (44.6 கி.மீ):

·மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை

39 உயர்நிலைப் பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள்

6 சுரங்கப்பாதை இரயில் மெட்ரோ இரயில் நிலையங்கள்.

வழித்தடம் 3-ல் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

சுரங்கம் தோண்டும் இயந்திரம் நீலகிரி (S-96) வழித்தடம் 3-ல் (Up line) கடந்த அண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் மாதவரம் பால்பண்ணை மெட்ரோ இரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மாதவரம் பால்பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 1.4 கி.மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று 07.08.2023 மாதவரம் நெடுஞ்சாலையை வந்தடைந்தது.

இந்நிகழ்வை, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் எஸ். அசோக் குமார், (தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தி (சுரங்கப்பாதை), டி. குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளர் ரீபு தமன் துபே, (சுரங்கப்பாதை), டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராமன் கபில், இயக்குநர் ரங்கநாதன், மேலாளர் ரமேஷ், பொது ஆலோசகர் குழுத் தலைவர் டோனி புர்செல், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர் மற்றும் டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பார்வையிட்டனர்.

Tags

Next Story